முக்தி

1. ஆன்மாக்கள் பல கோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள கர்மங்களை முழுவதுமாய் களைந்து, மீண்டும் பிறவாத நிலையை அடைவது ‘முக்தி’ என்று குறிக்கப் படுகிறது.

2. முக்தி வகைகள் நான்கு என்று புராணங்கள் பறை சாற்றுகிறது. சாலோக்கியம், சாயுச்சியம், சாமீப்பியம், சாரூப்பியம்.

3. சாலோக்கியம்: இறைவனின் உலகத்தை அடைந்து தொண்டு செய்தல்.

4. சாமீப்பியம்: இறைவனின் உலகத்தை அடைவதோடு அல்லாமல், அருகாமையில் இருந்து தொண்டாற்றும் பேறு.

5. சாரூப்பியம்: உபாசிக்கும் இறை வடிவத்தின் திருவுருவத்தையும் இறைச் சின்னங்களையும் பெற்று, இறைவனுக்கு தொண்டு செய்தல். (சில உதாரணங்கள்: திரிசூலம், சங்கு, சக்கரம், சக்தி வேல், நெற்றிக் கண்கள்).

6. சாயுச்சியம்: இறைவனோடு ஒன்று படுதல். ஜீவாத்ம – பரமாத்ம ஐக்கிய நிலையை குறிப்பது.

7. பரம்பொருளாகிய இறைவன் எடுத்தருளிய முக்கிய தெய்வ வடிவங்கள் ஐந்து. சிவபெருமான், அம்பிகை, ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, விநாயகப் பெருமான், முருகக் கடவுள். இவ்வடிவங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே நால்வகை முக்தி மார்கங்களும் உண்டு.

8. ஆன்மாக்கள் எவ்வகை முக்தியைப் பெற்றாலும் இயல்பில் இறைவனுக்குக் கட்டுப்பட்ட தன்மையைக் கொண்டவை.

9. இறைவன் நியமிப்பவன் (நியந்தா) – ஆன்மாக்கள் நியமிக்கப் படுபவர்கள், இறைவன் ஆட்டுவிப்பவன் – ஆன்மாக்கள் ஆட்டுவிக்கப் படுபவர்கள், இறைவன் ஆட்கொள்பவன் – ஜீவாத்மாக்கள் ஆட்கொள்ளப் படுபவர்கள், இறைவன் உடையவன் – ஆன்மாக்கள் உடைமைப் பொருள்.

10. முக்தி பெற்ற ஆன்மாக்களுக்கு ‘சுத்த சத்வ மயமான’ தெய்வ உடல் கிடைக்கப் பெறும். இச்சரீரம் என்றும் அழியாத தன்மை கொண்டது.

11. இறைவன் திருவுள்ளம் கொண்டால், முக்தி அடைந்த ஆன்மாக்களை, உலக நன்மைக்காக மீண்டும் இப்புவியில் அவதரிக்கச் செய்தருளுவார் (உதாரணம்: சுந்தர மூர்த்தி நாயனார், ஸ்ரீராமானுஜர்).

மனிதர்களாகப் பிறந்தவர்களின் ஆசை, முக்தி பெற வேண்டும் என்பதுதான்; ஆனால், இந்த முக்தி ஒரு சிலருக்கு தான் கிடைக்கிறது. சில ஷேத்திரங்கள், முக்தி ஸ்தலம் என்று சொல்லப்பட்டுள்ளது. கமலையில் (திருவாரூரில்) பிறந்தால், முக்தி; சிதம்பரத்தை (நடராஜரை) தரிசித்தால், முக்தி; திருவண்ணாமலையை (அண்ணா மலையை) நினைத்தாலே முக்தி; காசியில் இறந்தால், முக்தி என்றெல்லாம் கூறுகின்றனர்.

இதில், கமலையில் பிறப்பது இவன் கையில் இல்லை; அது, அவன் தாயாரின் விருப்பத்தைப் பொறுத்தது. அடுத்து, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. எத்தனையோ தடவை சிதம்பரம் வழியாகப் போவர்; ஆனால், இறங்கி, நடராஜ தரிசனம் செய்ய நேரமிராது. அடுத்தது, ரொம்ப சுலபம். அண்ணாமலையை நினைத்தாலே போதும், முக்தி கிடைக்குமாம். எவ்வளவோ வேலைகள், தொல்லைகள். அருணாசலத்தை, அது தான், திருவண்ணாமலை யாரை நினைக்க நேரமிராது. அடுத்தது, காசியில் மரிப்பவருக்கு முக்தி; ஆனால், அது எல்லாருக்கும் கிடைத்து விடாது. காசியில் மரிக்க வேண்டிய புண்ணியம் உள்ளவர்களை அழைத்து வரவும், புண்ணியமில்லாதவர்களை வரவிடாமல் தடுத்தும், அப்படி, யாராவது தங்கியிருந்தாலும், அவர்களை வெளியூருக்குக் கிளப்பி விடவும் தனித்தனியாக பூத கணங்களை அங்கே பகவான் வைத்திருப்பாராம்.

புண்ணியமில்லாதவன், காசிக்குப் போகிறேன் என்று, எத்தனை தடவை புறப்பட்டாலும் போக முடியாது; அதே போல், புண்ணியமில்லாதவன் அங்கிருந்தாலும் கடைசி காலத்தில் அங்கே மரிக்க முடியாது. புண்ணியமுள்ளவன் அங்கே இருந்தால் அது பாக்கியம் அல்லது வேறு எங்கேயாவது இருந்தாலும் மரண காலத்தில் அவன் அங்கே வந்து சேர்ந்து விடுவான். இது ஈ, எறும்பு முதல் எல்லா ஜீவன்களுக்கும் பொருந்தும். காசியிலுள்ள அனைத்து ஜீவன்களுக்கும் முக்தி!
காசி செல்ல ஏற்பாடு செய்கிறாள் ஒரு பாட்டியம்மா. எத்தனையோ சாமான்களை சேகரம் செய்து வைத்துக் கொள்கிறாள். கூடவே, ஒரு டின் நிறைய முறுக்கு எடுத்துக் கொள்கிறாள். காசியில் போய் டின்னைத் திறந்து பார்க்கிறாள். அதற்குள்ளே கட்டெறும்பு ஒன்று முழிச்சு, முழிச்சு பார்க்கிறது. “அட, சீ… கட்டெறும்பு, வந்துடுத்தே!’ என்று சொல்லி, எறும்பை எடுத்து கீழே தரையில் போட்டு காலால் மர்த்தனம் செய்கிறாள்.

கட்டெறும்பு புண்ணியம் செய்திருந்தது. டிக்கட் கூட வாங்காமல், சாப்பாட்டு செலவும் இல்லாமல் காசியில் மரணம்; முக்தி! இது எல்லாருக்கும் கிடைத்துவிடாது.
அங்கே யாராவது மரணமடைந்தால், அழமாட்டார்கள்; காசி விசுவநாதன் அழைத்துக் கொண்டு விட்டான் என்பர்.

இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும். நாம் பாரதத்தில் எத்தனையோ ஷேத்திரங்கள், புண்ணிய நதிகள். என மனிதன் நற்கதி பெற பல மார்க்கங்கள் உள்ளன. இவைகளிலும் நம் கவனம் செல்ல வேண்டும்.

புத்தரின் பிரதம சீடர்களில் ஒருவரான மொகலானா ஒரு முறை “உங்கள் சீடர்கள் அனைவருக்கும் இந்த உலக வாழ்விலிருந்து விடுதலையும் முக்தியும் கிடைக்கும் அல்லவா?” என்று புத்தரிடம் கேட்டார்.

அதற்குப் புத்தர் “ராஜகிரஹத்துக்குச் செல்லும் வழி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். “ஆமாம், தெரியும்” “பிறருக்காக அந்த வழியை விளக்கிச் சொல்ல முடியுமா?” என்று புத்தர் கேட்க, “ராஜகிரஹத்துக்குச் செல்லும் சாலை வழி இதுதான். கொஞ்சத் தூரம் சென்றால் ஒரு கிராமம் வரும். அங்கிருந்து நடந்தால் ஒரு தோட்டம் வரும். மேலும் முன்னே சென்றால், இயற்கைக் காட்சிகளும் சில இடங்களையும் காணலாம் என்று சொல்வேன்” என்றார் மொகலானா.

“சரி, நீங்கள் சொன்னபடி சிலர் அந்த இடத்தைச் சென்றடையலாம். இன்னும் சிலர் வழி தவறிப் போகவும் செய்யலாம், இல்லையா?”

“அதற்கு நான் என்ன செய்வது கவுதமரே. நான் பாதையை மட்டும்தானே காட்ட முடியும்?” என்றார் மொகலானா.

உடனே புத்தர், “என் சீடர் களுக்கு நானும் அப்படிப் பாதையை மட்டும்தான் காட்டுவேன். சிலர் முக்தியடை வார்கள். சிலர் முக்தி அடைய மாட்டார்கள். தலைவர் பாதையை மட்டும்தானே காட்ட முடியும்” என்றார்.

யாரைப் பொறுத்தது?

ஒரு பாதையில் ஒருவர் எவ்வளவு வேகமாகச் செல்ல முடியும் என்பதும், எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதும் அவரவருடைய மன ஆற்றலைப் பொறுத்தது என்பதே இந்த உரையாடலின் உட்கருத்து. மற்ற மதத்தைச் சேர்ந்த தீர்க்கதரிசிகளைப் போல, தன் சீடர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று புத்தர் வாக்குறுதி அளிக்க வில்லை. அனைவரும் முக்தி அடைவார்கள் என்றும் கூறவில்லை.

ஒவ்வொரு மனிதனின் முழுமையான ஈடுபாடும். முயற்சியுமே அவரை முக்தி பெறச் செய்யும். புத்தரின் சீடராக இருந்துவிட்டால் மட்டுமே ஒருவர் முக்தி அடைந்துவிட முடியாது. தன் பாதையில் செல்வதற்கான முயற்சியை ஒருவர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மனிதனின் முக்தி வேட்கையைத் தன் போதனையின் முக்கிய அம்சமாக்கினார் புத்தர். மற்ற மதத் தலைவர்கள் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலாகத்தான் புத்தருடைய வாழ்வு அமைந்தது.

தேவையற்ற சந்தேகம்

மற்ற மதத் தலைவர்களில் இருந்து மாறுபட்ட தீர்க்கதரிசி புத்தர். தன்னுடைய வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா என்பது பற்றியும், அதற்கு நிரந்தர ஆதரவு கிடைக்குமா என்பது பற்றியும் புத்தருக்குச் சந்தேகம் இருந்தது. கிம்பிலி என்னும் மூங்கில் தோப்பில் புத்தர் தங்கியிருந்தபோது, கிம்பிலியா என்ற துறவி, “புத்தர் போதிக்கும் தர்ம வழி, அவர் இறந்த பின்னரும் நிலைக்குமா?” என்று கேட்டார்.

அப்போது புத்தர் அளித்த பதிலில் சந்தேகமே நிலவியது. தான் வலியுறுத்தும் வழி தன் இறப்புக்குப் பின் நிலைக்குமா என்பதிலும், தன் வழியையும், சபை ஒழுக்கத்தையும் தன் சீடர்கள் பின்பற்றுவார்களா என்பதிலும் புத்தருக்கு ஐயம் இருந்தது.

தான் வலியுறுத்திய வழி அன்றைக்கு மாறுபட்டிருந் ததாலும், ஏற்கெனவே நம்புவதை மனிதர்கள் விடாப் பிடியாகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பார்களே என்ற காரணத்தாலும் இந்தச் சந்தேகம் புத்தருக்கு வந்திருக்கலாம். ஆனால், இத்தனை ஆயிரம் ஆண்டு களைக் கடந்தும் புத்தரின் தர்ம வழி மீதான பிடிப்பு தொடர்ந்துகொண்டே இருப்பது, அந்தச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

பன்னெடுங்காலமாக நம் ரிஷிகளும், முனிபுங்கவர்களும், யோகிகளும், தவசிகளும் வனங்களிலும், குகைகளிலும், புலனடக்கி, மனமொடுக்கி கடும் முயற்சியின் பயனாக அடைந்திட்ட ஞானத்தையும், முக்தியையும் வெகு எளிதாகப் பெற்றுத்தருவதாகச் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். பல ஜென்மங்களைக் கடந்தே நம் முன்னோர்களில் பல பேர் பலன்களை அடைந்திருக்கிறார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. அதன் படி முக்தி அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதே உண்மை. இதை மாற்றி அமைக்கவும், இந்தப் பிறவியிலேயே அதை அடைந்திடவும் தங்கள் அறிவின் தெளிவால் உபாயங்களைக் கண்டுபிடித்து, அவற்றைக் கடைபிடித்து சித்தி அடைந்தவர்கள் சித்தர்கள். இந்த சித்தி என்பது முக்தியின் ஒரு பிரிவாகும். அது என்ன பிரிவு ? முக்தி என்றால் இறைவனைக் கலந்து விடுவது தானே ? என்று கேட்கக் கூடும்.

அதாவது முக்தியை நான்கு விதமாகப் பிரித்து சொல்லியிருக்கிறார்கள். 1. சாரூப்ய முக்தி – இறைவனைப் போன்ற உருவம் பெற்று விடுதல். 2. சாமீப்ய முக்தி – இறைவனுக்கருகில் இடம் பெறுதல். 3. சாலோக்ய முக்தி – இறைவனோடு கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வசித்தல். 4. சாயுஜ்ய முக்தி – இறைவனோடு ஒன்றறக் கலந்து விடுதல். இதில் முதல் முக்திப்படிப் பார்த்தால் உருவமே இல்லாத இறைவனின் உருவம் அடைதல் என்றால் அதுவும் இறைவனைக் கலத்தலே ஆகும். ஆக ஒன்றும் நான்கும் இறையாற்றலோடு கலந்து விடுவதே. இடையில் காணப்படும் இரண்டும், மூன்றுமே சித்தியாகும். அதாவது இறையாற்றலுக்கருகில் வசிப்பது என்றால், ஸ்தூல சரீரத்தைத் துறந்து சூக்கும சரீரத்தோடு பரவெளியில் ஸமாதியில் திளைத்திருப்பதாகும். எனவேதான் முக்தி அடைந்தவர்கள் வருவதில்லை என்று சொல்கிறார்கள். சித்தி அடைந்தவர்களை ஒரு மனதோடு தியானித்தால் வருவார்கள் என்றும் சொல்கிறார்கள். இதற்கு ஆதாரமாக குரு இராகவேந்திரரைச் சொல்லலாம். அவர் ஜீவ சமாதியில் புகும் போது இன்னும் 400 ஆண்டுகள் இந்த இடத்தில் நான் இருப்பேன். நீங்கள் அழைத்தால் வருவேன். அதற்குப் பிறகே முக்தி அடைவேன் என்று சொன்னதாக வரலாறு.

இந்த சித்தியோ, முக்தியோ அடைவதற்கு முன் யோகியானவர் அடையும் உண்மையை உணர்ந்த நிலையையே ஞானம் என்கிறோம். ஞானம் அடைந்தவரருக்கு அறியாமை என்னும் அஞ்ஞானம் நீங்கி விடுகிறது. ஏனென்றால் அவர் பிரபஞ்ச மனதோடு தன் மனதை இணைத்து விடுவதால் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. பார்க்கப்படும் பொருள் இன்றி பார்ப்பவர் மட்டுமே என்ற நித்தியானந்த நிலையை அடைகிறார். அலைகளற்ற கடலைப் போல சலனமற்ற சமநிலையில் அவர் மனம் இருக்கிறது. பேதமற்ற நிலையில் அது, இது, நீ. நான் என்ற நிலையைக் கடந்து விடுகிறார். முப்பரிமாணங்களைக் கடந்து அடுத்த பரிணாமத்திற்குள் நுழைகிறார். அங்கே காலம் கிடையாது, உணர்வுகள் கிடையாது, முக்குண தோஷங்கள் கிடையாது, அது ஒரு பரப்பிரம்ம நிலை. எனினும் அவர் மனமானது நான் பிரம்மம் என்ற எண்ணத்தில் நிற்கிறது. இதைத்தான் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பார்கள்.

இந்த ஞானிகளை ஜீவன் முக்தர்கள் என்பார்கள். இந்த ஜீவன் முக்தர்களின் சாத்வீக அஹங்காரத் தரத்திற்கேற்ப அவர்களை நான்கு வகையாகச் சொல்வார்கள். 1. பிரம்மவித், 2. பிரம்மவித்வரன், 3. பிரம்மவித்வரீயான், 4. பிரம்மவித் வரிஷ்டர் என்பதாகும். இந்த ஞானத்தின் நிலைகளை ஏழு பிரிவாகச் சொல்வார்கள். அவை சுபேச்சா, விசாரணை, தனுமாநஸி, ஸத்வாபத்தி, அசம்சக்தி, பதார்த்தபாவனை, துரீயம் என்பவைகளாகும். இந்த நிலைகளை பூமிகா என்பார்கள். இந்த நிலைகளைப் பற்றியும், ஞானிகளைப்பற்றியும் ஏற்கனவே சொல்லியிருப்பதால், அடுத்த கட்டத்திற்கு வருவோம். முதல் மூன்று பூமிகாவில் அதாவது ஞானத்தின் நிலைகளில் செயல்படும் ஞானி முமுட்சு என்பார்கள். அதாவது புற உலகப் பொருள்களில் உதாசீனம், வைராக்யம், ஆத்ம ஞான நூல்களை வாசித்தல், பிரம்ம ஞானிகளின் தொடர்பு, கற்ற, கேட்ட விஷயங்களைப் பற்றிய விசாரணை, இடைவிடாத பயிற்சி இவற்றால் மனம் பிரம்மத்தில் லயிக்கிறது. அது ஒரு மெல்லிய நூலைப் போல மாறி விடுகிறது. பிரம்மாகார விருத்தி ஏற்படுகிறது. இதுவே முமுட்சு.

நான்காவது பூமிகாவில் செயல்படும் ஞானியை பிரம்மவித் என்பார்கள்.

மேலே சொன்ன மூன்று நிலைப் பயிற்சியால் ஆசைகள் அறவே ஒழிந்து விடுகிறது. தத்துவ ஞானம் வளர்கிறது. மனம் முழுவதும் சத்துவ குணத்தால் நிரம்பி வழிகிறது.

ஐந்தாவது பூமிகாவில் செயல்படுபவர் பிரம்மவித்வரன் எனப்படுவார். நான்காவது நிலையில் மனம் சத்துவத்தால் நிரப்பப்படும் போது மனமானது படிப்படியாக பிரம்மத்தில் கரைகிறது. கர்மாக்கள், சம்ஸ்காரங்கள், சங்கல்பங்கள் யாவும் இல்லாமல் போய் விடுகின்றன.

இனி ஆறாவது பூமிகாவில் செயல்படும் ஞானி பிரம்மவித் வரீயான் என்றழைக்கப்பட்டுகின்றார்.

புற மற்றும் அகப் பொருள்களின் காட்சி அறவே இல்லாமல் போய்விடுகின்றது. அதையும் மீறி ஏதாவது காட்சி இருக்குமானால் அது மற்றவர்களின் வற்புறுத்தலினாலானதாகவே இருக்கும்.

ஏழாவது பூமிகாவில் வசிக்கும் ஞானியே பிரம்மவித் வரிஷ்டன்.

இதுவே துரீயம். இதில் பன்மை உணரர்வுகளேதும் இல்லை. திரிபுடி எதுவுமில்லை. இவர்களால் உலக ஷேமத்துக்காக எதுவும் செய்ய முடியாது. உணவே கூட மற்றவர்கள் தான் இவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டி விட வேண்டும். இவர்களே அவதூதர்களாக ஆடைகளைத் துறந்து நிர்வாணியாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடம் சொர்க்கம். அந்த பிரதேஷமெங்கும் பிரகாசம் விளங்கும். ஆறு, ஏழு பூமிகாவில் இருப்பவர்கள் ஐந்து, நான்கு நிலைகளுக்கு இறங்கி வந்து லோக ஷேமத்திற்காக ஏதாவது செய்ய விரும்பினால் செய்யலாம். ஏழாவது பூமிகாவில் ஒரு ஞானி 14 நாட்களே உயிர் வாழ முடியும். அதாவது இந்த சரீரத்தில் இருக்க முடியும். ஏழாவது நிலை நீடிக்கும் போது துரீயாதீதம் மலர்கிறது. முக்தியோ, சித்தியோ அவர்கள் விரும்பியதை அடைவார்கள். ஏன் அவ்வாறென்றால் விருப்பம்ம உள்ளவர்களுக்கு அது ஒரு பற்றிருப்பதால் சித்தி. அந்த பற்றும் அறுத்தவர்களுக்கு முக்தி.

எனவே இடைவிடாத பலனைப் பற்றிய சிந்தனையில்லாதப் பயிற்சியும், வைராக்யமும், விடா முயற்சியும் இருந்தால் எந்த நொடியிலும், எப்போது வேண்டுமானாலும் ஞானமடைந்து முக்தியை அடையலாம். பலன் குறித்தும் தன்னிலை குறித்தும் கவலை கொள்கிறவர்களுக்கு மேலும் காலதாமதமே ஏற்படும். இதைக் குறித்து சொல்லப்பட்ட வார்த்தையே ”கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்பது”.

மனிதன் பிறப்பில் இருந்து தன் வாழ் நாளில் செய்திடும் பாவபுண்ணியங்களின் பலன்களைப் பொறுத்து, இறப்புக்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து அவற்றை அனுபவிப்பதாக நமது சித்தாந்தங்கள் நம்புகின்றன. மனிதனின் பாவக் கணக்குகள் தீரும் வரையில் இந்த சுழற்சி தொடர்வதாகவும் கருதப் படுகிறது.இந்த சுழற்சியில் இருந்து விடுபட்டு குறைவில்லா இன்பத்துடன் இருந்திடும் ஒரு நிலைதான் முக்தி எனப் படுகிறது.

முக்தி நிலை என்பது மிக உயரிய குறிக்கோளாய் கூறபபடுகிறது.கடுமையான முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே ஒருவர் இந்த மேலான நிலையினை அடைந்திட முடியும்.யோகம் என்கிற எட்டு நிலைகளில் தேர்ந்து தெளிந்தால் மட்டுமே முக்தி நிலை சாத்தியமாகும்.

இத்தகைய கடினமான முக்தி நிலையினை எட்டிடும் புதிய வழி ஒன்றினை பாம்பாட்டிச் சித்தர் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.

திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி சிக்காது தேசாசார தேசிகர் தம்மால் அருளான மூலகுரு அவர் செயலால் ஆனந்தம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே!

– பாம்பாட்டிச் சித்தர் –

பரந்து விரிந்த போர்களத்தில் படைகள் ஆவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ஊசியப் போட்டுவிட்டு மீண்டும் தேடி எடுக்க முடியாது அது போல முக்தியும் இலகுவில் கிடைக்காது. எத்தனை முயற்சிகள் கஷ்டங்கள் பட்டாலும் முக்தி என்பது அத்தனை இலகுவாகக் கிடைத்துவிடாது.

அதே நேரத்தில் இந்த உலகம் முழுவதும் எங்கும் சஞ்சரிக்கும் சித்தர்களின் அருளையும், மூலகுருவின் அருளையும்,கருணையையும் வேண்டிப் பெறுவதன் மூலமே கிடைப்பதற்க்கு அறிய முக்தியைப் பெறமுடியும். இவர்களின் மேலான அருளால் முக்தியை உணர்ந்து, ஆனந்தம் கொண்டோம் என்று ஆடு குண்டலினிப் பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
ஞானி கர்ம யோகத்தைப் பயின்று மனத்தூய்மை அடைந்தவன், அதன் பின் ஞான யோகத்தை பயின்று ஞானத்தில் நிலை பெற்றவனை பகவான் இங்கு ஞானநிஷ்டன் என்று ஞானியை சிறப்பாக குறிப்பிடுகிறார்.

இந்த ஆத்ம ஞானத்தை அறிந்த ஞானி மரணத்திற்கு முன் சீவ முக்தியும், உடல் அழிந்த பின்பு பிரம்ம நிர்வானம் எனும் விதேக முக்தியும் அடைகிறான். விதேக முக்தி அடைந்த ஞானிக்கு மறுபிறவி இல்லை.

ஆத்ம ஞானி என்பவன் கர்ம யோகம், பக்தி யோகம், மற்றும் ஞான யோகம் பயின்று ஆத்ம ஞானத்தை அடைந்து தன்னிடத்திலேயே தான் மகிழ்வாக இருப்பவனையே ஆத்ம ஞானி ஆவான். தன்னை அறிந்து தன்னிடத்தில் தான் நிலை பெற்று, மனநிறைவு அடைந்தவனே ஆத்ம ஞானி ஆவான். விவேகம், வைராக்கியம், மனவடக்க்ம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை, அகிம்சை, சத்துவ குணம், சமாதி மற்றும் ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற இடைவிடாத ஆர்வம் எனும் முமுச்சுத்துவம் போன்ற நற்குணங்கள் பெற்றவன், சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாசனம் எனும் மூன்று படிகளில் பிரம்ம தத்துவத்தை அறிந்தவனையே ஆத்ம ஞானியின் இலக்கணமாக கூறப்படுகிறது.

ஞானயோகத்தை அடைவது என்பதும், ஆத்மஞானத்தை அடைவது என்பதும் ஒன்றே. உயிருடன் இருக்கும் போதே ஞானமும் யோகமும் அடைவதே சீவ முக்தி என்பர். ஆத்ம ஞானி என்றால் ஆத்மஞானத்தை அறிந்தவன் என்று பொருள். யோகி எனில் ஸித்தி ’ அடைந்தவர் என்று பொருள். சீவ முக்தி எனும் மோட்சத்திற்கு இலக்கு ஆத்ம ஞானம் ஒன்று மட்டுமே. ஞானத்தை அடைவது எளிது என்றும், யோக சித்தியை அடைவது கடினம் என்று கருதுகிறார்கள்.

ஞானத்தை அடைய அதற்கான பிரமாணங்கள் (கருவிகள்) எனும் வேதாந்த சாத்திரங்களை மரபு வழி வந்த குருவின் மூலம் கேட்டு, சிந்தித்து விசாரித்து அறியவேண்டும். சாத்திரங்களை சரியான முறையில் பகுத்தாய்வு (விசாரணை) செய்யாவிட்டால் விபரீத ஞானம் ஏற்படும். மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு, அறிவைத் தரும் சரியான கருவிகள் (பிரமாணங்கள்) இருப்பினும் பலனில்லாமல், விபரீத ஞானம் உண்டாகும். இதனை ஞான ஆபாசம் (ஞானம் வந்து விட்டது போல் தோண்றும் உணர்வு) என்பர். எனவே யோகத்தினால் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.

எனவே ஞான சாத்திரங்களை தொடர்ந்து பயில்பவர்கள், யோகமும் பயில வேண்டும். ஞான சாத்திரங்களை பயில்பவர்களின் வாழ்க்கையை விட யோகம் பயின்றவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும். பலர் என்னதான் சாத்திரங்கள் பயின்றாலும், அதன்படி ஏன் நடந்து கொள்ள இயலவில்லை எனில் யோகப் பயிற்சி இல்லாத காரணத்தினால்தான். நமது உடல் பல உறுப்புக்களின் சேர்கையாக அமைந்துள்ளது. அறிவு/புத்தி கட்டளை இட்டாலும், சக்தியற்ற உறுப்புக்கள் புத்தியிட்ட கட்டளைகளை நிறைவேற்ற இயலாது. அது போல் ஞானம் இருந்தும் யோகம் இல்லை எனில் ஞானத்தினால் கிடைக்க வேண்டிய பலன்களான சீவன் முக்தி எனும் மோட்சம் கிடைப்பதரிது.

ஞானம் எனும் அறிவு ஒரு பொருளை கண்ணாடி போன்று உள்ளது உள்ளபடி காட்டும். எனவே ஒரு பொருளை பகுத்தாராய்வு செய்ய நம் மனதில் உள்ள தீய குணங்களை நீக்கி தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஞானத்தை அடைய யோகம் எனும் சாதனை அவசியமாகும். இந்த ஞான யோகத்தின் மூலம் தத்துவமசி என்ற மகாவாக்கிய ஞானம் மற்றும் அஹம் பிரம்மாஸ்மி போன்ற ஞானம் நம்முள் உண்டாகும்.

விதேக முக்தி என்பது ஞான யோகத்தின் மூலம் முக்குணங்களை கடந்த ஜீவன் முக்தன், ஆத்மஞானத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவதே விதேக முக்தி ஆகும். இந்த விதேக முக்தி அடைந்த ஒருவருக்கு (இறந்த பின்பு) மறுபிறவி கிடையாது. அத்தகைய மறுபிறவி அற்ற நிலையை அடைந்தவர்களை விதேக முக்தன் என்பர்.

கிரம முக்தி எனில் ஒருவன் இந்த பிறவியில் சீவ முக்தி அடைய இயலாவிட்டாலும், தான் செய்த புண்ணியத்தின் காரணமாக பிரம்ம லோகத்தை அடைந்து, அங்கு முழு ஆத்மா ஞானம் அடைந்து விதேக முக்தி பெறுகிறான். எனவே பகவானை அடைந்தவன் மறுபிறவி எடுப்பதில்லை. எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுதான் பகவானின் இருப்பிடம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!