மரணத்திற்கு அப்பால் (பகுதி 7)

மரியாவின் சாவைத் தொட்டுவரும் அனுபவம் (NDE)

சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் தங்களது உடலைவிட்டு வெளியே வருவதை உணர்கிறார்கள். அப்போது அவர்கள் அனுபவிப்பது ஒரு பரிபூரண சுதந்திரம், வலியே இல்லாத ஒரு நிலை. இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்போது தாங்கள் படுத்திருக்கும் இடத்திற்கு மேலே மிதப்பதாக அறிகிறார்கள். அங்கிருந்து அவர்களால் கீழே படுத்திருக்கும் ‘அவர்களைப் ‘ பார்க்கமுடிகிறது. தான் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறது, கூடி நிற்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறும் விஷயங்கள் மிகவும் சரியாகவே அமைகின்றன. இந்த செத்துப் பிழைக்கும் அனுபவத்தை உடலைத் தாண்டிய அனுபவம் (Out of body experience) என்றும் கூறலாம். இத்தகைய அனுபவங்களுக்குத் தகுந்த உதாரணமாக, சியாட்டில் நகருக்கு முதல் முறையாகப் பயணம் செய்த மரியா என்ற பெண்ணிற்கு நேர்ந்த நிகழ்ச்சியைக் கூறுவார்கள்.

மரியா என்ற வாஷிங்டன் நகரைச் சேர்ந்த பெண் 1977ம் ஆண்டு தன் நண்பர்களைக் காண முதல்முறையாக சியாட்டில் நகருக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவளுக்கு பலத்த இருதயநோய் ஏற்பட அவள் Harbourview மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு கிம்பர்லி கிளார்க் என்ற சமூகசேவகி மரியாவை உடனிருந்து கவனித்து வந்தார். திடீரென மரியாவின் இருதயம் செயலிழக்க, மருத்துவர்கள் செயற்கை முறையில் அவள் இருதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள்.

அதன் பின்னர் கிம்பர்லி கிளார்க்கிடம் மரியா சொன்ன செய்திகள் தான் பரபரப்பானவை. “டாக்டர்களும் நர்ஸ்களும் என் உடலில் சோதனை செய்துகொண்டிருந்தபோது அதிசயமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் உயர நாலாவது மாடியின் உயரத்திற்கு மிதந்து சென்று அந்த மேற்கூரையிலிருந்து என்மீது நடத்தப்படும் சோதனைகளைக் காண முடிந்தது என்று மரியா கூறியபோது கிளார்க் அதை நம்பவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அவள் கூறியவை திகைப்பூட்டின. தனது உடல்நிலைபற்றிய குறிப்புப்படங்கள் மானிட்டரிலிருந்து வெளிவருவதைப் பார்த்ததாகக் கூறினாள். அதுதவிர, தான் மேலும் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே மிதந்து சென்றதாகவும் அவள் கண்ட அவசர சிகிச்சை வழியைப்பற்றியும் அதன் கதவுகள் முன்புறமாகத் திறக்கப்படுவதைப் பற்றியும் விரிவாகக் கூறியபோது நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த மருத்துவமனைக்கு முதல் முறையாக மரியா வந்திருப்பதால் அதன் பல வேறு இடங்கள் பற்றி அவள் அறிந்திருக்க வழியேயில்லை. அவள் மேலும் தனது கட்டிடத்திற்கு வலதுபக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு ஜன்னலின் விளிம்பில் ஓரத்தில் கிழிந்துபோன ஒரு டென்னிஸ் ஷ¥வைக் கண்டதாகவும் அதன் முடிச்சு ஷ¥வின் அடிப்பாகத்தில் இருந்ததாகவும் கூறினாள். மரியா இருந்த இடத்திலிருந்து அப்படிப்பார்க்க வாய்ப்பே இல்லை. கிளார்க் அடுத்த கட்டிடத்தின் மூன்றாவது தªமாடிக்குச் சென்று அந்த ஜன்னலில் சோதனையிட்டபோது மரியா கூறியது சரியாகவே இருப்பது தெரியவந்தது இறப்பின் பின்னும் ஆன்மா அழியாமல் இருக்கிறது என்பதை நம்புபவர்கள் இதைத் தகுந்த சான்றாகக் காட்டுகிறார்கள்.

ரேய்னீ பாஸ்காரோவ் சாவைத் தொட்டுவரும் அனுபவம் (NDE)

ரேய்னீ பாஸ்காரோவ் தமது மரண அனுபவத்தை (NDE) தமது பதின்ம வயதில் அடைந்தார். உடலுக்கு ஒவ்வாத எதையோ உட்கொண்டதன் விளைவாக அவர் மயக்கமுற்று வீழ்ந்தபோது இது நடந்தது. இவருடைய (NDE) சற்று விசேஷமானது ஏனெனில் இவர் தமது இறந்த நிலையில் “அருளொளி” எனப்படும் ஒரு ‘திருவுருவின்’ சந்திப்பையும் பிறகு அந்த அருளொளியில் தாம் ஆழ்ந்திருத்ததும் குறித்த மறைஞான நிலையை அவ்வேளை பெற்றிருந்தார்.

ரேய்னீ மயக்கமுற்று வீழ்ந்த பிறகு, அவருடன் இருந்த அவரின் தாயாரின் முதல் எண்ணம் அவரை காரில் தூக்கிப்போட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதாகும். ஆனால் ரேய்னீ பேச்சுமூச்சில்லாமல் இருந்ததால் அவரை சாலையோரத்திற்கு நகர்த்திவிட்டு முதலுதவி வாகனம் வரும் வரை காத்திருப்பதென முடிவெடுத்தார். அப்போது ரேய்னீயின் வீங்கிய உடலைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியது.

இங்கிருந்து தமது அனுபவத்தை ரேய்னீயே விவரிக்கின்றார்:

தீயனைப்பு வண்டியின் சத்தம் கேட்டவுடன்தான் நாண் சுயவுணர்வு பெற்றேன். ஆரம்பப்பள்ளியில் என்னோடு படித்த என் உயிர் சினேகிதி என்னை கூப்பிடுவது என் காதுகளில் விழுந்தது. அவள் என்னை, ரேய்னீ, என்னைவிட்டு போய்விடாதே, என்னைவிட்டு போய்விடாதே ரேய்னீ என அலறுவதைக் கேட்டேன். அவளுடைய கதறல் விளங்கியது ஆனால் அது ஏதோ ஓர் அன்னிய மொழிபோல் இருந்தது. அதை விளங்கிக்கொண்டவுடன்தான் நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றேன் என்பதை உணர்ந்தேன். என் தாயாருக்காக, என் சினேகிதிக்காக — என் இதயத்தையே துளைத்துக்கொண்டிருந்த அவள் குரலில் காணப்பட்ட பீதியின் காரணமாக — என் உயிருக்காக நான் போராடியே தீரவேண்டும் என தீர்மானித்தேன்.

நான் என் உயிருக்காக போராடினேன் ஆனால், அதில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. அப்போது நான் என் ஆன்ம ரீதியாக நம்மையெல்லாம் உருவாக்கி உயிரளித்த அப்பரம்பொருளயே சரனடைந்தேன். இச்செயலே எல்லா உயிரினங்களுக்கும் மூலாதாரம் என்பது எனக்கு அப்போது தெரிந்தது, எல்லா விஷயங்களுக்கும் இதுதான் வழி என்பதையும் உணர்ந்தேன். நான் அப்பரம்பொருளுள் சரனடைந்தேன் பரிபூரண அமைதி என்னைச் சூழ்ந்தது. அப்போது, என்னைச் சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்திற்கிடையே நான் ஓர் ஒளிக்கோளம் போல் தோன்றினேன். என் பௌதீக நிலையில் நான் பெற்றிருந்த விழிப்புணர்வுக்கும் அப்பால் வெகு பிரம்மாண்டமான ஒரு விழிப்பு நிலையை அடைந்தேன். நான் என்னை மட்டும் அறியவில்லை. என்னைச் சுற்றிலும் இருந்த எல்லாரையும் குறித்த விழிப்புணர்வு பெற்றிருந்தேன். என் தாயார், என் பக்கத்து வீட்டினர், என் நண்பர்கள், தீயணைப்பு வீரர்கள் பற்றியும் அவர்கள் என்ன நினைத்தனர், என்ன உணர்ந்தனர், என்ன எதிர்ப்பார்த்தனர், மற்றும் எது குறித்து பிரார்த்தித்தனர் என்பதையெல்லாம் நான் உணர்ந்தேன். இந்த உணர்வுகள் மற்றும் தகவல்களின் உள்ளீட்டின் தாக்கத்தால் ஒரே நேரத்தில் திணறல், குழப்பம், நிலைதடுமாற்றம் ஆகியவற்றுக்கு ஆளானேன்.

நான் அவர்களெல்லாம் ஐந்தடியில் கவனம் செலுத்திய ஏதோ ஒரு பொருளின் மீது என் பார்வையை செலுத்தினேன், அது ஓர் உடல். அவ்வுடலுக்குச் சொந்தமான மணிக்கட்டைப் பார்த்தேன் அது யாருடையது என்பது தெரிந்தது. அந்த மணிக்கட்டின் வளைவைப் பார்த்து, “அது என் மணிக்கட்டு எலும்பைப் போலவே இருக்கின்றதே,” என நினைத்தது ஞாபகத்திற்கு வருகிறது. அப்போது திடீரென, ஐந்தடியில் கிடத்தப்பட்டிருந்த அந்த பொருள் வெறும் ஒரு மாமிசப் பிண்டமாகத் தோன்றியது. அதைத்தான் நான் அதற்கு முன்பு ‘நான்’ என எண்ணியிருந்தேன் ஆனால், அதோடு நீண்ட நாட்கள் ஒன்றாக வாழ்ந்தேன் என்பது தவிர அப் பிண்டத்திற்கும் எனக்கும் உறவேதும் இல்லையென தோன்றியது. அதற்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை, ஏனெனில், திடீரென இதற்கு முன் நான் எப்போதும் இருந்ததைவிட இப்போது முழுமையான ஒரு பிறவியாக இருக்கக் கண்டேன். அதற்கு மேல் அடைந்திட முடியாத விழிப்புணர்வை நிலையை அப்போது அடைந்திருந்தேன். பௌதீக நிலையின் வரையறைகளிலிருந்து நான் விடுபட்டிருந்தேன்.

என் உடலைப் பார்த்தேன்; அவ்வுடலைச் சுற்றி ஏற்பட்டிருந்த கிளர்ச்சி மற்றும் துக்கத்தினாலும், இவ்வளவு நாட்களாக பௌதீகமான ஏதோ ஒன்றை என் மெய்ம்மையாக, மனித மெய்ம்மையாக கருதியிருந்தது குறித்தும் சற்றே அறுவறுப்பு அடைந்தேன்.

அதன்பின், மேலே தெரிந்த மின்கம்பிகளுக்கும் உயரே உயரே நான் உந்தித் தள்ளப்பட்டேன். அவ்வுயரத்திலிருந்து எனக்குக் கீழே தெரிந்த எல்லோரையும் என்னால் காணமுடிந்தது, ஆனால் அவர்களோடு நான் நெருக்கப்பட்டிருக்கவில்லை, (ஆனால்) அவர்கள் உணர்ந்த அனைத்தையும் நானும் உணர்ந்தேன்.

என் தாயாரும் ஒரு பையனும் ஒரு வீட்டிலிருந்து வெளியே வந்து ஒரு மேட்டில் ஏறியது எனக்கு தெரிந்தது, ஆனால் அது பௌதீக ரீதியில் என் பார்வைக்குட்பட்ட இடமல்ல. (நான் இருந்த நிலையிலிருந்து என்னால் அக்காட்சியை காணமுடிந்தது.) நான் என் தாயாருக்காக கவலையுணர்வு அடைந்தேன். என்னை எழுப்ப முயற்சித்த என் சினேகிதிக்காக துயரமுற்றேன். வீட்டிற்கு வெளியே வந்த அந்த சிறுவனை பார்த்து கவலையடைந்தேன். அவன் நான் இறந்துவிட்டிருப்பேன் என நினைத்திருப்பானோ என கவலைப்பட்டேன். அவர்கள் மீது எனக்கு அக்கறையாக இருந்தது. நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்; அவர்களை கூப்பிட்டுப்பார்த்தேன் — எல்லாமே எப்போதும் போலவே இருக்கின்றது, பயப்பட வேண்டாம், நான் நன்றாக இருக்கின்றேன், நான் சுதந்திரமாக இருக்கின்றேன், மிகவும் அற்புதமாக இரு்ககின்றது, உங்களையெல்லாம் நான் மிகவும் நேசிக்கின்றேன் நீங்களும் என்னை நேசிக்கிறீர்கள், நமது உறவு லௌகீக உறவைப் போன்று அழியும் ஒன்றல்ல, அது நிரந்தரமானது என அவர்களுக்கு திரும்பத் திரும்ப கூற முயன்றேன், ஆனால் எனக்கு வாய் என ஒன்று இல்லை என்பது தெரிந்தது. எனக்கு ‘உடல்’ இல்லை. நான் அவர்களுக்கு கூறுவதை அவர்களால் செவிமடுக்க முடியவில்லை. நான் இறக்கும் போது என் உடலை எதன் கைகளில் விட்டு வந்தேனோ அதன் கையிலேயே அவர்களையும் நான் ஒப்படைக்க வேண்டும். அதோடு நான் வேறு பக்கம் திரும்பினேன், திருப்பிக் கொண்டேன்.

என் பார்வை பாசத்துடனேயே திரும்பியது, ஆனால், என்னால் எதையும் செய்ய முடியாது என்பதும் எனக்கு தெரிந்தது. நான் அவர்களிடமிருந்து அப்பால் திரும்பி என்னை மேலே உயர்த்திக்கொண்டேன். (வான்கப்பல் ஒன்றின் நிழற்பட கருவியிலிருந்து பார்ப்பது போல்) எங்கள் சுற்றுசூழல், என் வீதி, என் சிறிய ஊர் எல்லாவற்றையும் உணர்ந்தேன். நான் மேலே மேலே உயர்ந்து சென்றேன், அங்கிருந்து என்னால் இவ்வுலகையே பார்க்கமுடிந்தது. அது மிகவும் அற்புதமாக இருந்தது.

உலகம் உயிரூட்டத்தோடு இருந்தது, பூமி ஒருவித கீதம் இசைத்து கொண்டிருந்தது. அது ஏதோ ஒரு பண்ணைப் பாடியது அப் பண்ணுக்கு எல்லோருமே குரல் வழங்கியிருந்தனர். பூமியின் இவ்விலைமதிப்பற்ற கீதத்திற்கு ஒவ்வொருவருமே தங்களின் தனிச்சிறப்பான ஸ்வரத்தை வழங்கியிருந்தனர். அது அன்பின் கீதம், பூமியின் அப் பாட்டிற்கு ஒவ்வொரு உயிரினமும் தன் பங்கை வழங்கியது. இந்த ‘சாரங்கள்’ ஒவ்வொன்றும் மிக உறுதியாக இணைக்கப்பட்டிருந்தன. அதை நான் நாம் சாதாரனமாக பார்ப்பது போன்று பார்த்திடவில்லை. அதை அகன்றநிலையிலும் (விண்வெளி கப்பலிலிருந்து பார்ப்பது போல்) அதே சமயம் அனுகூலமான நுண்நோக்குநிலையிலும் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நுண்பார்வையால், சமுத்திரத்தில் வாழும் ஓர் நுண்ணுயிர்கூட மனித இனம் முழுவதின் இதய கீதத்தோடு இணைக்கப்பட்டிருந்ததை என்னால் காண முடிந்தது மற்றும் இவ்வுலகம் நமது உள்ளங்களில் ஒலிக்கும் கீதத்திற்கு நம்பமுடியாத வகையிலும் ஒற்றுமையோடும், அழகான வகையிலும் மறுமொழி பகன்றுகொண்டிருந்ததை உணர்ந்தேன். நானும் பாட ஆரம்பித்தேன். களிப்புணர்வால் ஆட்கொள்ளப்பட்டேன். அது வாயால் பாடப்படும் பாடலல்ல. எனக்கு வாய் இல்லை. எனக்கு உடல் இல்லை. ஆனால் நான் இருந்தேன். நானும் அந்த பாட்டின் ஒரு பகுதியாகி நமது உலகம் மற்றும் எல்லா மக்களின் புனிதமான அழகிற்கு என்னாலும் ஒரு பங்கை வழங்க முடிந்ததில் களிப்புணர்வு மிகுந்திருந்தேன்.

நாம் ஆக்கத்துடன் ஏதாகிலும் செய்திடாவிட்டாலும் மனிதர்கள் எனும் வகையில் நாம் இவ்வுலகின் மீது ஒரு தனிச்சிறப்புடனான தாக்கம் கொண்டுள்ளோம் என்பது குறித்து வெகுவாக விழிப்புணர்வுற்றேன். நாம் நம்முடைய வாழும் நிலைகேற்ப இவ்வுலகின் மீது அதற்கொப்பான தாக்கம் செலுத்துகிறோம். நாம் பிறர் மீது அன்பும் மரியாதையும் கொண்டிடும் போது இவ்வுலகின் மீது வெகு நேர்மறையாகவும் நமது இதயம் எதிர்மறை நிலையிலிருக்கும் போது உலகின் மீது எதிர்மறையான தாக்கமும் செலுத்துகின்றோம்.

அப்போது என்னை வேறு எங்கிருந்தோ ஓர் ‘ஒளி’ அழைப்பதை உணர்ந்து பொதுவாக எல்லோரும் ‘சுரங்கப்பாதை’ என அழைக்கும் ஒன்றிற்குள் நான் நுழைந்தேன். நான் அதை அவ்வாறு காணவில்லையெனினும் அதைச் சுரங்கப்பாதை என்றே அழைத்திடுவேன். அது ஒறு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு பெயர்ச்சியுறும் இடம். அங்கு நிலைதடுமாறிய, நிலைகுழம்பிய மற்றும் எங்கிருக்கின்றோம் என்பது தெரியாத பிற ஆன்மாக்கள் இருப்பதை உணர்ந்தேன் மற்றும் அவர்களுள் சிலர் அச் சுரங்கத்தின் வழி தங்களின் ‘இல்லம்’ சென்றுகொண்டிருந்தனர். நானும் அத்தகைய என் இல்லத்திற்கு செல்ல விரும்பினேன். நானும் அவ்விடத்தின் வழி நகர்ந்து சென்றேன் ஆனால் நாம் பௌதீகமாக நகர்வது போன்று நான் நகரவில்லை என்பதை உணர்ந்தேன். நாம் பௌதீக ரீதியில் நகரும்போது நமக்கு ஒரு குறிக்கோள் இருக்கும், நமக்கு ஒரு நோக்கம் இருக்கும், மற்றும் நாம் அக்குறிக்கோளை நோக்கி அடிமேல் அடிவைத்து நகர்வோம். ஆனால் இந்த இடத்திலோ நான் கொண்டிருந்த பிணைப்பும் கடவுளின்பால் என் அன்பும் என்னை உந்தித்தள்ளிய சக்திகளாக இருந்தன.

இந்த இடத்திற்குள் நுழைந்தவுடன், நான் தனியளாக இருக்கின்றேனா என ஓர் எண்ணம் தோன்றியவுடனேயே நான் என் மாமாவுடன் இருக்கக்கண்டேன். அப்போது நாங்கள் இருவரும் ஒன்றாக வைக்கப்பட்ட இரு விளக்குகள் போன்று இருந்தோம். நாங்கள் இருவரும் ஒருவர் சிகப்பு விளக்கு போன்றும் மற்றவர் நீல விளக்கு போன்றும் ஒன்றாக சேர்ந்து ஊதா நிறத்தை உருவாக்கினோம். உலக வாழ்வின் போது என் மாமாவைப் பற்றி நான் அறிந்திடாத பல விஷயங்கள் இப்போது தெரிந்தன. நான் அவருடன் அதிக நேரம் செலவிட்டதில்லை ஆகையால் அவரைப் பற்றி நான் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. அவர் தெற்கே வசித்து வந்தார் நானோ கலிபோர்னியாவில் வசித்து வந்தேன். ஆனால் அவரை அங்கு சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும், என்னை அங்கு பார்த்த என் மாமாவின் முகத்தில் கவலயுணர்வு படர கண்டேன். என் பிரிவை என் தாயாரால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை அவர் உடனடியாக எனக்குத் தெரிவித்தார். அவர் குழப்பமுற்றிருந்தாலும், நடப்பவை யாவும் நடக்கவேண்டிய முறையிலேயே நடக்கின்றது என்பதும் அவருக்கு தெரிந்திருந்து.

அத்தருணத்திலிருந்து நான் அந்த அருளொளியின்பால் தவிர்க்கமுடியாத வகையில் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அந்த ஒளியை நேசித்தேன். என்னை என் ‘இல்லத்திற்கு’ ஈர்த்த அச்சக்தியை நான் பெரிதும் நேசித்தேன்.

நான் என் மாமாவைத் தாண்டி ஒளிக் கடலோ என கூறும்படியான ஒன்றிற்குள் நுழைந்தேன். பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அனுவும் வர்ணம், ஒளி மற்றும் ஓசையினால், ஆனால் அதற்கும் மேலாக, நிபந்தனையற்ற அன்பினால் பெருங்கிளர்ச்சியுற்றது போல் தோன்றியது. அது எனக்கென வழங்கப்பட்ட வரவேற்பாக இருந்தது. நான் அந்த கடலுக்குள் பாய்ந்தேன், மற்றும் வினாடிக்கு வினாடி என் கழிபேருவகையும், ஆனந்தமும், வாய்விட்டு விவரிக்கமுடியாத அன்புணர்வும் அதிகரித்தன. அக்கடலினுள் நான் நகர்ந்து சென்றபோது, நான் ஏற்கனவே கருதியிருந்த அந்த ஒளிக்கடலின் மையத்தை நெருங்கிக்கொண்டிருப்பதை, சூரியனை நோக்கி ஓர் ஒலுங்குப்பூச்சி பறப்பதைப் போன்று உணர்ந்தேன். அதுவே அந்த ஒளிக்கடல் குறித்து எனக்குள் உருவான எண்ணமாகும்.

பிறகு கண்மூடி திறப்பதற்குள், ஒரு கைத்தட்டல் போன்று, நான் அந்த ஒளிக்குள் நுழைந்து அதனோடு ஒன்றிணைந்தேன். இந்த ஒளிக்குள், நான் தனிமனிதப்பிறவியாக இல்லை, ஒரு மனிதநிலையிலேயே இல்லை, மாறாக அந்த ஒளியின் ஒரு பகுதியாகவே மாறினேன். நான் ஓர் அக்னிபறவை(phoenix) போல் ஆகினேன். நான் எனக்குள் அழிவுற்றேன். அது பெரும் களிப்புமிகு, என்னால் கற்பனை செய்யவே முடியாத மனதைத் அலைக்கழிக்கும் பேரழகு வாய்ந்த ஒரு தருணமாகும். ஜீவிதத்திற்கு இதுவே சிகரமென எனக்குத் தோன்றியது. அவ்விடத்தில் நாம் மறைந்துவிடுவோம். நாம் அவ்வொளியின் ஒரு பகுதியாகிவிடுவோம்.

நேரத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட நேரமோவென தோன்றிய ஒரு நிலையிலிருந்து, நான் ஒரு தனிப்பிறவியாக கடற்கரை மனல் போன்று ஒன்றுதிரட்டப்பட்டு (உலகவாழ்வில்) என் செய்கைகளுக்காக காரணம் கூறிட அழைக்கப்பட்டேன்.

அந்த நேரத்தில், ரேய்னீயிடம் பல விஷயங்கள் காண்பிக்கப்பட்டன; பூமியில் ‘நியாயவான்கள்’ என அழைக்கப்பட்டோர் அடங்கிய குழு ஒன்று ரேய்னீயிடம் காண்பிக்கப்பட்டது. அவர்கள் பூமியில் நிலவும் நாடுகளுக்கும் சமயங்களுக்குமிடையிலான பிரிவுகளில் கவனம் செலுத்தாமல் மனிதகுலத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுவதை ரேய்னீ கண்டார். தன் சொந்த பெற்றோர்களை தான் நன்கு அறிந்துவைத்திருந்தது போல் அவ்வுலகில் வாழ்ந்தும் உழைத்தும் வந்த, தனக்கு நன்கு பழக்கமானோர்களை’ ரேய்னீ அங்கு கண்டார்.

அதன் பிறகு தான் அங்கு சந்தித்த “ஒளித் திருவுரு” குறித்து ரேய்னீ விவரித்தார். அத் திருவுரு ரேய்னீயின் கடந்தகால வாழ்வு குறித்த பல்வேறு அம்சங்களைக் காண்பித்து அவற்றை அவரோடு மறு ஆய்வு செய்தது. நாம் நமது தினசரி வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கும் பல செயல்களை பார்க்கிலும் அன்புடன் செய்யப்படும் நமது சிறு சிறு செயல்கள் மற்றெல்லா செயல்களையும்விட எவ்வளவு முக்கியத்துவம் மிக்கவை என்பது குறித்து அவர் விவரித்தார். ரேய்னீ தான் தமது வாழ்வில் செய்த மிகவும் நேர்மறையான ஒரு செயல் கோடைக்கால பள்ளியில் தான் சந்தித்த அன்புக்கு வகையற்ற ஒரு பையனிடம், அவனை நேசிப்போரும் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திட, அவனிடம் அன்பு காட்டிய செயலாகும் என விவரித்தார். தமது ‘மரணசம்பவம்’ குறித்த மறு ஆய்வு நிகழ்வின் போது அமெரிக்க அதிபராக அல்லது இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருக்கும் செயல்களைக் காட்டிலும் தமது விரிவடைந்த விழிப்புணர்வின் கண்ணோட்டத்தில் அன்புகலந்த செயல்களே அதி முக்கியத்துவம் வாய்ந்தவை என ரேய்னீ கூறினார்.

தமது வாழ்வின் மறு ஆய்வுக்கு பிறகு, அந்த ‘ஒளித்திருவுரு,’ “ரேய்னீ அந்த (ஆன்மீக) உலகிற்குள் நுழைவதற்கான காலம் இன்னமும் கனியவில்லை,” என கூறியது. அதன் பிறகு ரேய்னீ தாம் தமது பூத உடலோடு எவ்வாறு மறுபடியும் இணைந்தார் என்பதை விவரித்தார்:

ஒரு சுரங்கப்பாதை என தோன்றிய ஒன்றின் வழி நான் மீண்டும் (மனித உலகிற்கே) உந்தித்தள்ளப்பட்டேன். இம்முறை வானவில்லின் நிறங்களும் ஒலிகளும் அன்பின் அதிர்வலைகளும் நிறைந்த சுரங்கப்பாதையின் வழியே திரும்பினேன். மிகவும் கடினமான ஒரு சப்தத்துடன் நான் (இறக்கும்போது) விட்டுச்சென்ற அந்த சூழ்நிலை குறித்து — நெருப்பனைப்பு வண்டிகள், இப்போது மேலும் வந்திருந்த முதலுதவி வாகனம் ஆகியவை குறித்து விழிப்படைந்தேன். என் உடலைத் தூக்கி முதலுதவி வாகனத்திற்குள் வைத்த முதலுதவியாளர்கள் இருந்தனர். நான் முற்றிலும் துக்கம் நிறைந்த ஒரு நிலையில் இருந்தேன். அப்போது நான் ‘ஏவாள்’ ஆகி ‘ஏடன்’ தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது போன்று இருந்தது.

அச்சுரங்கப்பாதை வழி நான் இறங்கி வந்துகொண்டிருந்தபோது, விண்ணுலகிலிருந்த என் ‘இல்லத்தோடு’ என் உள்ளம் ஏற்கனவே ஊன்றிப்போயிருந்நது. திரும்பி அனுப்பப்பட வேண்டாம் என நான் வேண்டிக்கொண்டிருந்தேன். இவ்வுலகில் நான் திடுமென வீழ்ந்து நேரம், காலம் ஆகியவற்றால் சற்று குழப்பமே அடைந்தேன். நான் பூதவுடலே கொண்டதில்லை என்பது போல் இருந்தது. நான் திடீரென நிலைதடுமாறிப் போனேன். என கவலையெல்லாம் என் தாயாரைப் பற்றியே இருந்தது, அவர் தனியாக இருந்தார், தமது பதினாறு வயது மகளை பறிகொடுக்கும் நிலையில் இருக்கின்றார். முதலுதவி வாகன உதவியாளர் வாகன ஓட்டுனரைப் பார்த்து, “DOA. DOA,” (அதாவது இறந்தவரை கொண்டுவருகிறோம்) என கூறியது ரேய்னீக்கு கேட்டது. அதுவரை வாகனத்தை படுவேகத்தில் ஓட்டி வந்த வாகன ஓட்டுனர் முதலுதவி வாகன சங்கொலியை நிறுத்திவிட்டு அதன் பிறகு வாகனத்தை மிகவும் மெதுவாக ஓட்டிச் சென்றார்.

நாங்கள் ஒரு மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தோம். அப்போது என் மனம் என் தாயார் படும் துயரத்தின் மீதே இருந்தது. அவரை சாந்தப்படுத்தி என் ஆன்மாவைக் கொண்டு அவரை அரவணைத்துக்கொள்ளவே ஏங்கினேன். அவருடைய மகளின் மறைவை, அவருடைய பெண் பிள்ளையின் மறைவின் சோகத்தை தனிப்பதற்காக நான் பிரார்த்தனை செய்தேன்.

நான் முதலுதவி வாகனத்தைப் பின்தொடர்ந்து மருத்துவமனை வரை சென்று என் உடல் இறக்கப்படுவதை கண்ணுற்றேன். என் தாயார் என்னை அவசர சிகிச்சை அறைவரை பின்தொடர்ந்தார். முதலில் வந்த மருத்துவர் என்னை சோதிப்பதை பார்த்தேன். அந்த முதல் மருத்துவரைப் பற்றி நான் அவ்வளவாக அக்கறைப் படவில்லை. அன்று அவர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் அடிபட்டவர்கள் பலரை கவனிக்க வேண்டியிருந்தது. பார்ப்பதற்கு அவர் மிகவும் களைத்தவராக இருந்தார். இறந்தே கொண்டுவரப்பட்ட ஒரு பெண்ணைப் (என்னைப்) பற்றி அவர் அவ்வளவாக அக்கறை கொண்டிடவில்லை. அவர் என்னோடு எவ்விதத்திலும் ‘தொடர்பு’ கொண்டிட வில்லை. அவருக்கு எவ்வித அக்கறையுணர்வோ வாஞ்சையுணர்வோ இல்லை. என கவனமோ, வாஞ்சை மற்றும் அன்பின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆகவே, அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைக் காண்பதற்கு நான் அவ்வளாவாக அக்கறை கொள்ளவில்லை.

பிறகு நான் அவசர சிகிச்சை அறையை விடுத்து அடுத்த அறைக்குள் இருந்த என் தாயார் மற்றும் அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்கும் மேலே இருந்தேன். அவர்களோடு மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றேன். “இது மிகவும் களிப்புமிகு ஒரு நிகழ்வு; நான் இறந்தே மருத்துவசாலைக்கு வந்துள்ளேன். ஆனால் யாவும் நலமாக முடியும். அவர்கள் என்னை எழுப்பிட முடியாது. நான் இறக்க போகின்றேன். இறப்பே எனக்கு வாழ்வு. இறப்பை கண்டு பயப்படவேண்டியதில்லை, மாறாக நாம் ஆவலுடன் எதிர்ப்பார்க்கக்கூடிய ஒரு நிகழ்வே ஆகும் அது” என அவர்களுக்கு தெரிவிக்க முயன்றேன்.

பிறகு என்ன நடந்ததென்றால், முதலில் வந்த மருத்துவர் நான் மரணமுற்றதாக அறிவித்து என் உடலை பிணமனைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அவ்வேளை நாட்டுப்புறத்தில் சேவையில் ஈடுபட்டவரும் சற்று அழுத்தமானவருமான என் குடும்ப மருத்துவர் அங்கு தமது டக்சிடோ உடையுடனும் மருத்தவப் பையுடனும் திடும்பிரவேசம் செய்தார். அங்கு பிணமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த தாதியைப் பார்த்தும், பிறகு தமது கையைக் கழுவிக்கொண்டிருந்த மருத்துவரைப் பார்த்தும், அதன் பின் மூடப்பட்டிருந்த என்னைப் பார்த்தும், “இங்கு என்ன நடந்தது? என் நோயாளி எங்கே,” என சப்தமிட்டார். அவர்கள் அதற்கு, “நோயாளி இறந்தே கொண்டுவரப்பாட்டார்,” என கூறினர். அதற்கு அவர், “என்ன இறந்தவிட்டாள் ,” என உரக்கக் கத்திவிட்டு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு தாதியைப் பார்த்து “எனக்கு ஏட்ரீனலின் மருந்தூசி வேண்டும். அதை உடனடியாக கொண்டுவந்துவிட்டு எனக்கு இங்கே வந்து உதவிசெய்,” என ஆணையிட்டார். பிறகு என் உடலின் மீது கவனம் செலுத்தப்பட்டது. என் குடும்ப மருத்துவர் என் நெஞ்சில் ஓங்கி ஓங்கி குத்தி மின் அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்தார். நான் சூழ்நிலை மாற்றத்தினால் பெரிதும் அச்சமுற்றும் ஓர் உடலை அப்படி கையாளும் விதத்தினால் மகவும் அருவருப்பும் அடைந்தேன்.

அவ்வேளை நான் என் உடலோடு எவ்வித பிடிப்பும் கொண்டிராவிட்டாலும் அதை பாதுகாக்க வேண்டும் எனும் உணர்வு என்னை ஆட்கொள்ளவே செய்தது. குறைந்த பட்சம் என் உடலை சற்று மரியாதையுடனாவது நடத்தலாமே என நினைத்தேன். ஆனால் அவர்கள் என் நெஞ்சின் மீது ஒங்கி ஓங்கி அடித்துக்கொண்டும் உடலை மின் அதிர்ச்சிக்கு ஆளாக்கிக்கொண்டும் இருந்தனர். இதெல்லாம் நடந்தபோது நான் அவசர சிகிச்சை அறையின் ஒரு மூலையில், என்னை அந்த அறைக்குள் வைத்திருந்த பிற ‘சாரங்களோடு’ ஒருவளாக இருந்தேன்.

இறுதியில் தமது குடும்ப மருத்தவரின் இறுதி முயற்சியால் எவ்வாறு உயிர்பெற்றார் என்பதை ரேய்னீ விவரித்தார். உயிர்பெற்ற பிறகு தாம் ஊக்கமின்மையால் அவதியுற்றும் அந்த அனுபவத்திற்கு பிறகு இந்த உலகோடு தமக்கு தொடர்புகொள்வது எவ்வாறு சிறமமாகியது என்பது குறித்தும் அவர் பேசினார். தமது மரண அனுபவம் குறித்து அவர் தொடர்பு கொண்ட மருத்துவ நிபுணர்கள் அந்த அனுபவத்தை எவ்வாறு விளக்குவது என்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர். இறுதியில் தமது அனுபவம் சமயம் சார்ந்த ஓர் ஆன்மீக அனுபவமாகையால், அந்த நிபுணர்கள் அது குறித்து கருத்து வழங்கும் ஆற்றல் இல்லாதவர்கள் என ரேய்னீ கூறினார்.

மேற்குறிப்பிட்ட அனுபவங்கள் தவிர, தமது மரண அனுபவத்தின் போது உலகில் ஏற்படும் பேரழிவுகள் யாவும் மனிதர்களுக்கிடையே ஏற்படும் போராட்டங்களின் விளைவே என தமக்கு தெரிவிக்கப்பட்டதாக ரேய்னீ கூறினார். உலகமும் அதில் அடங்கியுள்ள யாவும் பிரமாண்டமான ஒரே ஒற்றை உயிர்ப்பொருள் என்பது இதன் கருதாக்கமாகும்.

உலகம் கடுங்கொந்தளிப்பை அனுபவிக்கப் போகின்றது. பிரபஞ்சத்தின் சட்டங்களை மனிதர்கள் மீறுவதனால் பெருந்துன்பங்கள் நேரவிருக்கின்றன. “அகந்தை, உலோகாயதம், இனவாதம், வெறிப்பற்று, மற்றும் பிரிவினைவாதம் எனும் புற்றுநோய்கள் மானிடத்தை விழுங்கி வருகின்றன. கல்வியளிப்பதை நோக்கமாக கொண்டு உலகம் சுத்திகரிக்கப்படப் போகின்றது. மானிடம் ‘மறுபிறப்பு’ எய்தும். அது மிகவும் கடுந்துன்பம் மிக்கது, ஆனால் அதிலிருந்து மானிடம் பனிவுநிலை அடைந்து, கல்விபுகட்டப்பட்டு, அமைதியடைந்தும் ஒற்றுமைப்படுத்தப்பட்டும் வெளிவரும்

மரணம் மீண்டும் உயர்பிக்கப்படும்..

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!