மரணத்திற்கு அப்பால் (பகுதி 5)

ந த்வேவாஹம்ஜாது நாஸம்ந த்வம் நேமே ஜனாதி பா
நசைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத;பரம் – கீதை

இதன் விளக்கம் நீ யார் அழிவார் என்று நினைக்கிறாயோ, அவர்கள் அனைவரும் நீயும் நானும் கூட இல்லாமல் போக மாட்டோம். இந்த உடல் தோன்றுவதற்கு முன்னும் நாம் அனைவரும் இருந்தோம். இந்த உடல் அழிந்த பிறகும் நாம் இருப்போம். உடல் அழிவதால் ஆத்மா நாசமுறாது. ஆகவே நசித்துவிடுவார்களோ என்று ஐயப்படுவதும் வருந்துவதும் உசிதமல்ல

சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்களைத் தான் “Near Death Experience” (NDE) என்று அழைப்போம். இந்த வார்த்தையை முதன் முதலில் Dr Raymond Moody என்பவர், சாவைத் தொட்டு வரும் அனுபவங்களைச் சந்தித்த பலரை ஆராய்ச்சி செய்து அந்த தொகுப்பினை வெளியிட்ட “Life After Life” என்னும் நூலில் 1975 ம் ஆண்டு உபயோகப் படுத்தினார். இவர் ஆராய்ச்சி செய்த அனைவரும் மருத்துவர்களால் இறந்துப் போனார்கள் (clinical death) என்று சான்றளிக்கப்பட்டு ஒரு சில நொடிகளில் அல்லது மணிகளில் உயிருடன் வந்தவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டாலும் அவர்கள் கூறியவற்றில் பல ஒத்துப் போயின. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறும் விஷயங்கள் மிகவும் சரியாகவே அமைகின்றன. இந்த செத்துப் பிழைக்கும் அனுபவத்தை உடலைத் தாண்டிய அனுபவம் (Out of body experience) என்றும் கூறலாம்.

1926ம் ஆண்டு, Sir William Barrett என்ற ஆராய்ச்சியாளர், ‘இறக்கும்போது புலப்படும் தோற்றங்கள்’ (Deathbed Visions) (DBV) என்ற தனது புத்தகத்தில், இறப்பவர்கள், இறப்பதற்கு முன், வேறொரு உலகத்தைக் காண்கிறார்கள், இறந்தவர்களுடன் பேசுகிறார்கள்” என்று சொல்கிறார். இறக்கும் போது இசையையும் அவர்கள் கேட்டதாகவும், உடலை விட்டு ஆவி பிரிவதைக் காண முடிந்ததாகவும் கூறுகிறார்.

கனக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Kenneth Ring என்பவர் 1980ல் சாவின் விளிம்பிற்குச் சென்றுவந்த 102 பேரிடம் விவரங்கள் சேகரித்தார். அவற்றில் 50 சதவிகிதத்தினர் அடைந்த அனுபவத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் அடைந்த அனுபவங்களை, கென்னத் ரிங் ‘அமைதி, உடலை விட்டு உயிர் பிரிவது, ஒரு இருட்டு சுரங்கப் பாதையை அடைவது, வெளிச்சத்தைக் காண்பது, ஒளியை அடைவது’ என ஐந்து பகுதிகளாகப் பிரித்தார். இதற்கடுத்த பகுதிகள் வெகு சிலராலேயே உணரப்பட்டன. எனவே, இறப்பின் போது காணும் காட்சிகளில் ஒரு ஒற்றுமை இருப்பதை அவர் கண்டார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது. இங்கு பல அம்மனுஷ்யங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன், கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். “நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்…”

இவ்வாறு பலர் ஆராய்ச்சி செய்தாலும், முடிவுகள் ஒன்றோடொன்று தொடர்பு உடையாதகவே உள்ளது. அவை,

சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அல்லது செத்துப் பிழைத்தவர்கள், தங்களது உடலைவிட்டு வெளியே வருவதை உணர்கிறார்கள். அப்போது அவர்கள் அனுபவிப்பது ஒரு பரிபூரண சுதந்திரம், வலியே இல்லாத ஒரு நிலை. இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்போது தாங்கள் படுத்திருக்கும் இடத்திற்கு மேலே மிதப்பதாக அறிகிறார்கள். அங்கிருந்து அவர்களால் கீழே படுத்திருக்கும் ‘அவர்களைப் ‘ பார்க்கமுடிகிறது. தான் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறது, கூடி நிற்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. இத்தகைய அனுபவங்களுக்குத் தகுந்த உதாரணமாக, சியாட்டில் நகருக்கு முதல் முறையாகப் பயணம் செய்த மரியா என்ற பெண்ணிற்கு நேர்ந்த நிகழ்ச்சியைக் கூறுவார்கள்.

ஒருவர் இறக்கும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக கூறுவதைக் கேட்கிறார்கள். பிறகு ஒரு சத்தம், அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால், தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர், முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறார். ஒரு ஒளிசக்தி, அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன் மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை – அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்ல வேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில், அவருக்கு அமைதி, சந்தோஷம், அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பி வந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் , அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இறப்பின் விளிம்பில் என்ன நடக்கிறது என்று ஆராயும் போது கலாசாரப் பின்னணியையும் கருத்தில் கொள்ளவேண்டுமா என்ற வினா எழுகிறது. கலாச்சார வேறுபாடு இல்லை என்று நடத்தப்பட்ட சில ஆராய்ச்சிகள் கூறினாலும், மத அடிப்படை இந்த விஷயங்களை விவரிப்பதில் இடைப்படுகிறது என்பது தெளிவாகிறது. குழந்தைகளிடம் கூட சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் இறப்பின் விளிம்பில் மரணமடைந்த தங்கள் நண்பர்களையே காண்கிறார்கள் என்பது ஆச்சரியப் படவைக்கும் விஷயம் . இதற்குக் காரணம், அவர்களது நண்பர்கள் வியாதிகளின் காரணமாக மரணமடைவதென்பது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்ச்சி என்பது தான். சிறுவயதுகளில் யாரும் நோயின் காரணமாக அதிகம் இறப்பதில்லை

NDE மற்றும் DBV அனுபவத்தை பார்த்தவர்களின் கதையை கேட்கும் முன் இன்னும் சிலவற்றைத் தெரிந்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்து மதத்தைப் பொறுத்த வரை, இந்த பிரபஞ்சத்தில் மொத்தம் 14 உலகங்களை இறைவன் படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு உலகங்களிலும் ஒருவர் வசிக்கின்றனர். இந்த பூமியில் வாழும் மக்களாகிய நமக்கு ஒரே ஒரு உலகம் தான். ஆனால் தெய்வ சக்திகளுக்கு 14 உலகங்கள் என்று கூறுகின்றன. அவை,

 1. சத்தியலோகம் – பிரம்மன்
 2. தபோலோகம் – தேவதைகள்
 3. ஜனோலோகம் – பித்ருக்கள்
 4. சொர்க்கம் – இந்திரன் மற்றும் தேவர்கள்
 5. மஹர்லோகம் – முனிவர்கள்
 6. புனர்லோகம் – கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்
 7. பூலோகம் – மனிதர்கள், விலங்குகள்
 8. அதல லோகம், விதல லோகம் – அரக்கர்கள்
 9. விதல லோகம் – சிவனின் அம்சமான கடவுள் ஹர பவ என்பவரால் ஆட்சி செய்யப்படும் உலகம்.
 10. சுதலலோகம் – அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி
 11. தலாதல லோகம் – மாயாவிகள்
 12. மகாதல லோகம் – புகழ்பெற்ற அசுரர்கள்
 13. பாதாள லோகம் – வாசுகி முதலான பாம்புகள்
 14. ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள்.

உயிரை எடுத்துச் செல்பவர்களை கிருஸ்துவ மதமோ, இந்து மதமோ, அவர்களை மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள் என்கிறது.

கருட புராணம் கிங்கரர்களை அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது. அவர்கள் வாழ்நாள் முடிந்து போன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச் செய்வதே அவர்களின் பணி என்றும் மாறுபடுத்திக் கூறினாலும் பைபிளும் குரானும் இதே மாதிரியான விளக்கங்களையே இவர்களைப் பற்றித் தருகிறது.

மேலும் இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது. உயிர்கள் புரிந்த நன்மை தீமைகளை விசாரிப்பதும் அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் யக்ஷர்களின் வேலை என்றும் புராணங்கள் மற்றும் மத நூல்கள் பலவற்றில் காண முடிகிறது.

உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதைக் கருடபுராணம் கவிதா லாவண்யத்தோடு விவரிப்பதைப் பார்ப்போம்.

செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த இடத்திலேயே விட்டு வரும் படியும் மீண்டும் 12 நாட்கள் சென்ற பின் தன் முன்னால் கொண்டு வரும் படியும் கட்டளை பிறப்பிப்பான்.

உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80 000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக் கொண்டு விட்டு விடுவார்கள். இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும். காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால் மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.

செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள். அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள் பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள். அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள்.

அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். உடல் மீது விழுந்து அழுத்துவார்கள். இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள். உடல் மயானத்தைச் சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல் வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து பதை பதைத்து துடிக்குமாம். தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும் போதும் கூடவே வருவார்கள்.

மிகப்பழமையான பெயர் தெரியாத ஏட்டு சுவடி ஒன்றில் சில மந்திரங்களைக் குறிப்பிட்டு அம்மந்திரங்களை முறைப்படி உரு ஏற்றினால் சிதைக்கு மேலே நின்று துடிக்கும் ஆவி உருவை நேரில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது. இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.

உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது. காற்றில் மிதக்கும் வெண்மை அல்லது கருமை நிற புகை போன்ற வடிவத்திலேயே ஆவிகள் இருக்கும். இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஆவிகளை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் வெண்பனி போன்றோ கரிய புகை வடிவிலோ ஆவிகளைப் பார்த்ததாகத் தான் கூறுகிறார்கள். மிகச்சிலர் மட்டுமே பௌதிக வடிவில் ஆவிகளைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். ஆவிகள் கருப்பு வெள்ளையாகத் தான் காட்சித்தருமா? மற்ற வண்ணங்களில் ஆவிகள் வராதா? இந்த நிறங்களில் மட்டும் பெருவாரியான ஆவிகள் காட்சி தருவது ஏன்? என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை.

இதற்கு பழைய நூல்களில் கிடைத்த விஷயங்களிலும் வேறு பலர் மேற்கொண்ட சோதனைகளிலும் மிகத் தெளிவான பதில் கிடைத்துள்ளது. பூமியில் நல்ல வண்ணம் வாழ்ந்து மறைந்து போன ஆவிகள் வெள்ளை நிறத்திலும் மனதிற்குள் காமக் குரோதங்களை சுமந்கும் பல தீய செயல்கள் புரிந்தும் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோன ஆவிகள் கருப்பு நிறத்திலும் இருப்பதாகக்கண்டறியப்பட்டள்ளது. மேலும் ஆன்மீக ரீதியில் முன்னேற்றமடைந்து மனிதருள் மாணிக்கமாய் இருந்து முக்தி அடைந்த சித்த புருஷர்களின் ஆவிகள் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனாலும் வைதீக சாஸ்திரங்கள் உயிர்கள் காற்று போன்ற இந்த வடிவில் இருப்பதற்கு வேறு விளக்கங்கள் தருகிறது. முறைப்படியான இறுதிச் சடங்குகளும் திதி திவசம் போன்றவைகள் கொடுக்கப்படாமல் இருக்கும் ஆவிகள் தான் உருவமற்று புகைவடிவில் நடமாடும் என்றும் சாஸ்திரப்படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட ஆத்மாக்கள் புகைவடிவில் இருந்தாலும் அந்தப்புகை வடிவம் கூட அவர்கள் பூமியில் வாழ்ந்த போது என்ன உருவத்தல் இருந்தார்களோ அதே உருவமாகத்தான் இருப்பார்கள் காட்சி தருவார்கள் என்கிறது.

சாஸ்திரங்கள் கூறும் கருத்திலும் தவறுகள் இல்லை எனலாம். ஏனெனில், சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்ட ஆவிகளுக்கு அழுத்தம் திருத்தமான பௌதிகத் தோற்றம் போலவே தெரிகிறது என்றும் மற்றவர்களுக்கு அழுத்தமான உருவங்கள் அமையாததால் வெறும் புகை வடிவாக மட்டுமே தோன்றுகிறது என்ற முடிவிற்கு நம்மை வரவைக்கிறது.

முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம் எப்படி வந்தமைகிறது என்பதைக் கருட புராணம் அழகாகக் கூறுகிறது.

* இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது.
* இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும்
* மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும்
* நான்காம் நாளில் வயிறும்
* ஐந்தாம் நாளில் உந்தியும்
* ஆறாம் நாளில் பிருஷ்டமும்
* ஏழாம் நாளில் குய்யமும்
* எட்டாம் நாளில் தொடைகளும்
* ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி
* பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும்.

பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் கழ்த்தப்பட்ட எல்லாவிதமான காரியங்களையும் நினைத்துப் பார்த்து அழுது துடிக்குமாம். மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.

கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும் பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப் பிரிவைப் பற்றியோ மரணமடைந்ததைப் பற்றியோ துளி கூடக் கவலைப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச்செல்வார்கள். அப்படி இழுத்துச் செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலை அமைப்புக்கொண்ட அமானுஷ்ய வனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக் காயப்படுத்தும்.

அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவதுபோல் ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச் செல்லப்படுமாம். அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம்.

மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம் ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம். அந்த நகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம். இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம். பாவத்தின் தண்டனையும் பாசத்தின் சோதனையும ஆவியைச் சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக் கொண்டவனைப் போல் வருத்தி எடுக்குமாம்.

இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும். அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக் கூட்டங்களும் நிறைந்திருக்கும். அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச்செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள்.

ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற நதிக்கரையை அடைவார்கள். சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது. அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள்.

புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள். இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.

பக்குவப்பதம் என்ற இடத்தில் எட்டாம் மாதம் பிண்டத்தையும் துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது பிண்டத்தையும் நாதாக்தாதம் என்ற இடத்தில் பத்தாவது பிண்டத்தையும் அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது பிண்டத்தையும், சீதாப்ரம் என்ற இடத்தில் பன்னிரெண்டாவது அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.

மரணமடைந்து ஒரு வருடத்திற்குப் பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழைய முடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால் 12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணிய க்ணக்குகளைப் பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.

இங்கு நாம் எமலோகத்திற்குப் போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப்பார்த்தோம். தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான். நன்மையைச்செய்த ஆத்மாக்கள் கூட இதே வழியில்தான் அழைத்து செல்லப்படுவார்களா? இதே துன்பங்களைதான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான். நமது சாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரணதேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள். இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.

அனுபவ ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மரணத்தின் அறிகுறியை எவ்வாறு அறிவது?
1. ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தம்.
2. ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்தும்.
3. ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
4. ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தம்.
5. ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.
6. நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
7. ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.
8. ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.
9. சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
10. ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
11. நன்கு பரிச்சியமான ஒருவர் அருகில் இருந்தாலும், அவரை இறந்த தன் நெருங்கியவர்களின் பெயரைக் கொண்டு அழைத்தால் மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
12. பால்ய கால சிநேகிதர்களையோ, உறவுகளையோ அடிக்கடி அழைத்தால் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

மரணம் மீண்டும் ஜனிக்கும்…

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!