மரணத்திற்கு அப்பால் (பகுதி 3)

பகவத் கீதை கூறுவது என்ன:

அர்ஜுனனை தனது சீடனாக ஏற்று, குரு என்ற ஸ்தானத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழங்கிய முதல் பாடம்: உடல் வேறு, ஆத்மா வேறு. உடலின் அடிப்படையில் காரணங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்த அர்ஜுனனிடம், கிருஷ்ணர் ஆத்மாவைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

ந த்வேவாஹம் ஜாது நாஸம்ந த்வம் நேமே ஜனாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம:ஸர்வே வயம் அத: பரம்

“நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.” (பகவத் கீதை 2.12)

ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஷாஷ்வதோ ’யம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே

“ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன். உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.”

இந்த ஸ்லோகங்களில், ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரின் உண்மையான நிலையையும் மிகத் தெளிவாக விளக்குகிறார். அதாவது, மனிதர்களாக இருந்தாலும் சரி, வேறெந்த உடலில் வாழ்ந்தாலும் சரி, உண்மையில் நாம் எவரும் ஒருபோதும் அழிவதில்லை. எல்லா காலத்திலும் நிரந்தரமாக வெவ்வேறு உடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவே நமது உண்மையான நிலை. இதனை ஸ்ரீ கிருஷ்ணர் ஓர் அருமையான உதாரணத்தைக் கொண்டு பகவத் கீதையில் (2.22) நன்கு விளக்குகிறார்:

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ ’பராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்-
யன்யானி ஸ்ம்யாதி நவானி தேஹி

“பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.” ஆத்மாவை வெட்ட முடியாது. எரிக்க முடியாது. நனைக்க முடியாது. உலர்த்தவும் முடியாது. ஆத்மா நிரந்தரமானது. எங்கும் உள்ளது. நிலையானதாய், அசைவற்றதாய் எப்பொழுதும் உள்ளது.

எந்தவொரு ஜீவனுக்கும் அழிவே இல்லை என்னும் பட்சத்தில், மரணம் உண்டாகும்பொழுது அழிவது என்ன? மரணத்தின்போது, ஜடவுடல் மட்டும் அழிவிற்கு உட்படுவதாக கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்கு மாற்றமடைவதையும் அவர் விளக்குகின்றார்.

இவ்வாறாக, ஓர் உடலை விட்டு வேறு உடலை ஆத்மா ஏற்கும்போது, அவன் தன்னுடைய தாய் தந்தையரையோ மதத்தையோ தேர்ந்தெடுப்பதில்லை. தனது பாவ புண்ணியத்திற்கு ஏற்றாற் போல, தாய்தந்தை, பிறப்பிடம், உடல் அழகு, செல்வம், அறிவு போன்றவை தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகின்றன, கர்மணா தைவ நேத்ரேண. எனவே, நாம் தனித்தன்மை வாய்ந்த ஆத்மாக்களே தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்தவரல்ல. இன்று ஒரு மதத்தில் இருப்பவர்கள் மறுபிறவியில் வேறு மதத்தில் பிறக்க நேரிடலாம். இதனால் உடலை அடிப்படையாகக் கொண்டு, மதத்தின் அடிப்படையில் நாம் எதையும் நிர்ணயிக்க முடியாது. ஆத்மா என்னும் உண்மையான நிலையில், நாம் அனைவரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள், அதுவே ஸநாதன தர்மம் என்று அழைக்கப்படுகின்றது.

திருக்குறள் கூறுவது என்ன:

எழுபிறப்பும் தீயவை தீண்டா-பழி பிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். திருக்குறள் : 62 அதிகாரம் : 7

விளக்கம் : ஏழ் பிறவிக்கும் தீயவை சாராது, பழி உண்டாக்காத பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால்.

இக் குறளில் வள்ளுவர் ஏழு பிறப்பு என்று கூற வருகிறார். அதாவது மனித ஆன்மாவிற்கு ஏழ் பிறவி என்றும், மரணத்தில் ஆத்மா அழிவதில்லை என்பதும் அவரவர் செய்யும் பாவ, புணியங்களுக்கேற்ப மறுபிறவி உண்டு என்பதும், அப்பிறவிச் சுழற்சியினின்று கட்டறுத்து வீடு பெறுதல் என்பதே மனிதனின் நோக்கம் என்றும் கூற வருகிறார். எனவே உயிர்களின் மறு பிறப்புக்களை அவற்றின் அறிவின் தன்மைக்கேற்ப ஏழு வகை என்று சொல்கின்றார்கள். அதாவது தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மக்கள், தேவர் என்பவை எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். மறுபிறப்புக்கள் மொத்தம் ஏழு என்பதல்ல ஏழு வகை என்பதே சரியானது.

இவை வள்ளுவரின் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதைக் காட்டிலும் சித்தாந்தக் கருத்துக்கள் என்று கொள்வதே சரி. காரணம் இவையே சித்தர்களின் வாழ்வியல் தத்துவங்களும் ஆகும். குறளின் கவிதை நயத்திற்கான வார்த்தைச் சித்து மட்டுமல்ல வாழ்வியலின் கூறுகளை, நளினங்களை அவற்றின் பிறப்பு, இறப்பு அதை மீறிய வாழ்வுத் தொடர் பற்றிய நுணுக்கங்களையும், தெளிவையும் ஒரு சித்தர் போலவே உணர்த்துகிறார்.

“இன்மை யெனவொரு பாவி மறுமையு
மிம்மையு மின்றி வரும்”

என்ற குறளில் ஒருவன் கற்ற கல்வியானது அவனது அடுத்தடுத்த பிறவிகளிலும் பயன்படும் என்றும், ஒருவனது நல்குரவு அவனது மறுபிறப்பிலும் வரும் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். இதனால் திருவள்ளுவர் காலத்திலேயே, தமிழர்கள் இம்மை மறுமை இவற்றில் முழு நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.

திருவாசகம் கூறுவது என்ன:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

என்று மாணிக்கவாசகர் கூறுகிறார். அதாவது புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே ! இதிலிருந்து பிறவிகள் பல உண்டு என்பது நன்கு விளங்கப்படுகிறது.

இராமாயணம் கூறுவது என்ன:

இராமாயணத்தில் இறத்தலும் பிறத்தலும் பற்றி சில இடங்களில் கூறப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, அரசு போனதற்கு ராமன் கலங்கவில்லை. காடு போ என்று சொன்ன போதும் கலங்கவில்லை. ஆனால், தசரதன் இறந்து போனார் என்ற செய்தியை கேட்டவுடன் இராமன் மயங்கி விழுந்தான். தந்தை இறந்தார் என்ற செய்தி கேட்ட போது இராமனுக்கு துக்கம் தாளவில்லை. அப்போது கலங்கிய இராமனுக்கு வசிட்டன் வாழ்வின் நிலையாமை பற்றி

துறத்தலும் நல் அறத்
துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்

வரம்பு கண்ட நீ?

என்று கூறுகிறார். அதாவது

“துறவறமும் இல்லறமும் அல்லது உயிர்களுக்கு வேறு வழி இல்லை. இறப்பும் பிறப்பும் இயற்கை என்பதை எல்லாம் அறிந்த நீ எப்படி மறந்தாய் ”

மேலோட்டமாய் பார்த்தால் இவ்வளவுதான் அர்த்தம். கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால்,

நாம் வாழ்கையை ஒரே கோணத்தில் சிந்திக்கிறோம். பிறப்பு , வளர்தல், மூப்பு, பின் இறப்பு….இந்த கோணத்தில் நாம் பார்க்கிறோம். இறப்போடு எல்லாம் முடிந்து விடுகிறது என்று நினைக்கிறோம்.

ஆனால் வசிட்டர் வேறு விதமாக சொல்கிறார்.

“இறத்தலும் பிறத்தலும் இயற்கை ” முதலில் இறப்பு, பின் பிறப்பு இதுதான் இயற்கை என்கிறார்.

தசரதன் இறந்து போனார். “இதை முடிவு என்று நினைக்காதே , இறந்தது பிறக்கும் ” என்று இராமனுக்கு அறிவுறுத்துகிறார்.

பிறந்தது இறக்கும் என்பது கண் கூடு. இறந்தது பிறக்குமா என்பது தெரியாது. சந்தேகம் இருக்கிறது அதில். பிறத்தலும் இறத்தலும் இயற்கை என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை. வாழ்கை ஒரு முடிவற்ற நதிபோல் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே போல் , இல்லறம் , அது முடிந்து துறவறம். அது தான் நாம் அறிந்த முறை.

வசிட்டர் அதையும் மாற்றிப் போடுகிறார்.

“துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது” முதலில் துறவறம் சொல்லி அப்புறம் நல் அறம் அதாவது இல் அறம் (இல்லறம்) பற்றி கூறுகிறார்.

இது வசிட்டர் சொன்னார் என்றால் ஏதோ தனக்கு ஆறுதல் சொல்வதற்காக அப்படி சொல்கிறார் என்று இராமன் நினைக்கலாம். நாமும் அப்படித்தான் நினைப்போம். எனவே வசிட்டன் சொல்கிறார்

“மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ”

மறைகள் (வேதம் முதலியவை ) அப்படித்தான் சொல்கின்றன. நீ அதைப் படித்து இருகிறாய். மறந்து விட்டாயா என்று இராமனுக்கு ஞாபகப் படுத்துகிறார்.

இராமன் ஏதோ மறைகளை கடமைக்கு படித்தவன் அல்லன். அவற்றின் எல்லைகளை கண்டவன்.அவற்றின் முடிவை அறிந்தவன். அவை சொல்வதின் அர்த்தம் முழுதும் அறிந்தவன்.

தசரதன் இறந்தான் என்று வருந்தாதே, தசரதன் மீண்டும் பிறந்தான் என்று எண்ணிக் கொள். துக்கம் எங்கே வரும் ? என்பது தான் அது.

ஆத்மாவைப் பற்றி இராமன் லட்சுமணனிடம் கூறும் பொழுது

“ஆன்மா என்பது தேகம், இந்த்ரியங்கள், புத்தி இவைகளுக்கெல்லாம் மேலே வசிப்பதாகும். அது சுயம் பிரகாசமான சுத்த சத் சிதானந்தம். அது தத்துவார்த்தமானது. அதற்கு உருவம் கிடையாது. அது நித்யம். அதற்கு விகல்பங்கள் கிடையாது. விகாரங்கள் கிடையாது. அதுவே உலகில் நடப்பைவைகளுக்கெல்லாம் காரணம்; அதுவே உலகம் முழுவதும் நிறைந்து நிற்கிறது; ஆனால் எதனாலும் பாதிக்கப் படாமல் சாட்சியாய் மட்டும் நிற்கிறது; அதற்கு எல்லாம் தெரியும்; புரியும்; அதை மட்டும் நினை”

“இந்த உலகில் நமக்கு ஆற்றவேண்டிய கடமைகள் – கர்மங்கள் உண்டு. அந்த கர்மங்களையெல்லாம் எந்தவித கலக்கமுமில்லாமல் நியதிப்படி செய்யவேண்டும். ஆனால் கர்மங்களில் எந்த ஸங்கமும் இல்லாமல் பந்தங்களும் உண்டு பண்ணாமல் கர்மங்களின் பலன்களிலும் பற்று வைக்காமல் பரமனுக்கு அர்ப்பணித்து விட்டு செயலாற்றுவாயாக”

என்று கூறுகிறார்.

புறநானூறு கூறுவது என்ன:

இறப்பினால் ஒருவனுக்கு பூத உடல் அழிந்து பிரேத உடல் உருவாகிறது என்பது வேத மதக் கருத்து. இறந்த 12 ஆவது நாள் அந்தப் பிரேத உடல் மறைகிறது. இறந்தவுடன் பூத உடலையும், 12 ஆவது நாள் பிரேத உடலையும் விட்ட ஆத்மா தன் முன்னோருடன் இணைகிறது. அதை ‘சபிண்டி’ அல்லது ‘சபிண்டீகரணம்’ என்பார்கள்.

ஒரு ஆத்மா பிறப்பெடுக்க 12 மாதங்கள் ஆகின்றன. அந்த ஆத்மா இறப்பின் மூலம் உடலை விட்டு நீங்கிய பின்னர் 12 நாட்களில் தான் முன்பு இருந்த நிலைக்கு வருகிறது. 12 மாதம் என்பது 12 நாட்களுக்கு இணையாகச் சொல்லப்படுகிறது. பிறப்பெடுக்கும் போது, அந்த ஆத்மா, மழை மூலமாகப் பூமிக்குள் சென்று, செடிகளால் உறிஞ்சப்படும் நீருடன் ஏதேனும் ஒரு செடிக்குள் நுழைகிறது. பிறகு அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை பெறுகிறது. அந்தக் காய் அல்லது கனியை, ஒரு மனிதன் (ஆண்) உண்ணும் போது, அவனது உணவுக் குழாய் வழியாகச் சென்று, முடிவில் அவனது விந்தணுவில் நிலை கொள்கிறது. இது வரை அந்த ஆத்மாவுக்கு எந்த வலியும், கர்மவினைப்பயனும் ஏற்படாது.

அந்த ஆணினது விந்தணுவில் அந்த ஆத்மா 2 மாதங்கள் இருக்கும். அதற்குப் பிறகு அது ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் நுழையும் போது, ஒரு உயிராகப் பிறக்கிறது. ஆத்மா வேறு, உயிர் வேறு. ஆத்மாவுக்கு உணவுடன் தொடர்பு ஏற்படும் போது உயிர் உண்டாகிறது. அதாவது ஆணின் விந்தணு, பெண்ணணுவான சினை முட்டையில் கலந்தவுடன் வளருகிறது. CELL DIVISION என்னும் வளர்ச்சிக்குக் காரணம், பெண் கர்ப்பப்பையிலிருந்து உணவு கிடைக்க ஆரம்பிக்கிறது. தாய் இடும் அன்னம் அங்கேயே தொடங்குகிறது.

அன்ன சம்பந்தம் வந்தவுடன் உயிர் வந்து விடுகிறது. அன்னத்தால் உயிர் வளர்கிறது. ஆத்மா பெறும் முதல் அன்னம், திட ரூபத்தில் இருப்பதில்லை. அன்னத்தின் நுட்பச் சத்துக்கள், உருவமில்லாத ரூபத்தில், திரவ ரூபத்தில் அதற்குக் கிடைக்கிறது. அந்தச் சத்து, தாய் உண்ட அன்னத்திலிருந்து கிடைக்கிறது. அந்த அன்னம் நிலமும், நீரும் சேர்ந்ததால் கிடைக்கிறது. இதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலைச் சிறிது எட்டிப்பார்த்து விட்டு, தமிழ் மரபிலும் வேதக் கருத்தே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு மேலே தொடரலாம்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

உண்டி முதற்றே உயிரின் பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தின் நீரே.

நீரு நிலனும் புணரி யோரீண்

டுடம்பு உயிரும் படைத்திசினோரே.”

என்று குடபுலவியனார் (பு.நா. 18) கூறுகிறார்.

பிண்டம் என்பது பிண்ட் என்னும் சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து உருவானது. இதைப் பிடி என்றும் சொல்வார்கள். பிண்டம் என்பதற்குச் சேர்த்தல் என்று பொருள். பிடித்தல் என்றாலும், ஒன்றாக இணைத்தல் அல்லது உணவின் தொகுப்பு என்று பொருள். ஆத்மாவுடன் உணவு சேரும் போது அதற்கு உயிர் வருகிறது. அந்த உணவு உடலாக வளருகிறது. இதையே மணிமேகலையும் (10-90) ” மக்கள் யாக்கை உணவின் பிண்டம்” என்று கூறுகிறது.

உயிர் இருந்தால்தான் ஐம்பூதங்களால் கிடைக்கும் சக்திகளைப் பெற முடியும், அதைக் கொண்டு ஐம்பொறிகளை இயக்க முடியும். ஆத்மாவுக்கு எல்லா சக்தியும் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்ட உருவம் தேவை. அதைப் பெற, ஒருவன் பிறப்பதற்கு முன் தாயின் கர்ப்பத்திலிருந்து உணவை எடுத்துக் கொண்டு பிண்ட ரூபத்தில் இருக்கிறான். அவன் இறந்த பின்னர் பிண்டம் என்னும் உணவுக் கோளம் மூலமாக அவனுக்கு உணவிட்டு அந்த ஆத்மாவின் உயிர்த் தொடர்பை அறுகாமல் வைத்திருப்பதே இறந்தவர்க்குச் செய்யும் சடங்காக வேத மதத்தில் இருக்கிறது.

இதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலும் இருக்கிறது. “புன் மேல் வைத்த இன்சிறு பிண்டம்” (பு.நா. 234) என்று தர்ப்பைப் புல் மீது வேள் எவ்விக்கு அவன் மனைவி பிண்டம் வைக்கிறாள்.

நிலனும், நீரும் சேருமிடத்து உணவு உண்டாகிறது. காய்ந்த நிலத்தில் மழை பெய்தவுடன் செடிகள் முளைப்பதால், நிலத்தில் உணவுப்பொருள் இருக்கிறது என்பது தெரிகிறது. நிலத்துடன் நீர் சேர்ந்தால்தான் அது உயிரைக் கொடுக்கத்தக்க உணவாக ஆக முடியும். இதைச் சொல்லும் குடபுலவியனார், நீரற்ற நிலம் பயனற்றது. எனவே நீர் வளத்துடன் கூடிய நிலத்தை அரசர்கள் பரிசாகக் கொடுத்து, இறந்த பின் தாம் செல்லும் உலகத்துச் செல்வம் என அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் பெறுவர் என்கிறார். ஒருவர் மற்றொருவருக்கு உணவு கொடுக்கும் போது, உயிர் தழைக்கக் காரணமாகிறார். அதனால் தான் இறந்த பின்னும், அதாவது பூத உடலில் உயிரை இழந்த பின்னும், மேலுலகில் உயிருடன் இருக்க இந்த உணவுத்தானம் உதவுகிறது.

தாயின் கர்ப்பத்தில் 10 மாதங்கள் வளரும் பிண்ட உடலானது, தாயின் உணவு மூலமாகப் பஞ்ச பூதங்களிலிருந்தும் அவ்வவற்றின் சத்தை எடுத்துக் கொண்டு வளர்கிறது. முழு உருவம் பெற்ற பின் இந்த உலகில் பிறக்கிறது.

முடிவில் இறக்கும் போது. ஆத்மா அழிவதில்லை. அது உடலை விட்டு வெளியேறி விடுகிறது. உணவால் ஏற்பட்ட உடலைத் தீக்கிரையாக்குகின்றனர். அல்லது புதைக்கின்றனர். வேத மரபில் இயற்கை மரணமாக இருந்தால் எரித்தலும், அகால மரணமாக இருந்தால் புதைத்தலும் வழக்கமாக இருக்கிறது. உடலை எரிக்கும் போது, உணவால் ஆன உடல் சாம்பலாகிறது ஆனால், அதனுடைய பிரேத உடல் சாவதில்லை.

பிரேத உடல் என்றால் என்ன என்று ஆராய்ந்தால், அதைப் பின்வருமாறு எளிதாக விளக்கலாம். ஒரு மரக்கட்டையை எரிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்,. அது சாம்பலாகி விடும், ஆனால் எரியும் போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும். எந்தப் பொருளும் அழிவதில்லை. எந்த ஒரு பொருளும் ஒரு நிலையிலிருந்து, மற்றொரு நிலைக்கு உருமாற்றம் அடைகிறது என்னும் இயற்கைக் கோட்பாட்டின் அடிப்படையில், அதன் சில பகுதிகள் சாம்பலாகியும், பிற பகுதிகள் வாயு ரூபத்திலும் உரு மாற்றம் அடைகின்றன.

அது போல ஒருவன் இறந்த பிறகு, அவனது உடலை எரித்தால், அது சாம்பலானாலும், அவனது உடல் திசுக்களில் உள்ள வேதிப் பொருட்கள் வாயு ரூபத்தில் உருமாறுகின்றன. அல்லது அறிவியல் அறியாத ஏதோ ஒரு உருமாற்றம் நடக்கிறது. உணவுடன் (பிண்டத்துடன்) தொடர்புடைய அப்படிப்பட்ட உருமாற்றத்தை பிரேத சரீரம் என்று வேத மதம் அழைக்கிறது.

எரித்த சாம்பலைக் கடலிலோ அல்லது ஓடும் நதியிலோ கரைத்து விடுகிறார்கள். இதனால் திட உருவில் மீதம் இருக்கும் பகுதிகள் பல பில்லியன்களில் ஒரு பங்கு என்ற அளவில் இயற்கையில் கரைந்து விடுகிறது. ஆனால் வாயு ரூபத்திலும், வேறு ஏதோ ரூபத்திலும் இருக்கும் அவனது உடல் கூறுகள் இன்னும் காற்றில் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் வரை இயற்கையின் சமன்பாடு பாதிக்கப்படுகிறது. இயற்கை மாசு படுகிறது. அந்த மாசைத் ‘தீட்டு’ என்கிறார்கள். இயற்கையின் சமன்பாடும், மாசில்லா நிலையும் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதே வேத மதத்தின் குறிக்கோள்.

பிறப்பின் பயணம் 2+ 10 மாதங்கள். ஒரு மாதம் என்பது ஒரு நாள் என்ற கணக்கில் இறப்பின் பயணம், இறப்புக்குப் பிறகு 10+ 2 நாட்களில் அமைகிறது. முதல் 10 நாட்கள் என்பது பிறப்புக்கு முன் தாயின் கர்பத்தில் இருக்கும் 10 மாதங்களுக்குச் சமம். அடுத்த இரண்டு நாட்கள், தாயின் கர்ப்பத்தில் நுழைவதற்கு முன் தந்தையின் உடலில் இருக்கும் 2 மாதங்களுக்குச் சமம்.

தாயின் கர்ப்பத்தில் 10 மாதங்கள் அந்தப் பிண்டம் படிப்படியாக வளர்ந்தது, இறந்த பிறகு முதல் பத்து நாட்களில் பிரேதமான சரீரம் படிப்படியாகத் தான் வந்த பஞ்ச பூதங்களில் கரைகிறது. இதை வேத மந்திரம் மூலமாகச் செய்கிறார்கள். இதனால் இறந்த 10 ஆம் நாள்தான் ஒருவன் உண்மையில் இறந்தவனாகக் கருதப்படுகிறான். ஆயினும், தாயின் கர்ப்பத்தில் நுழைவதற்கு முன் அந்த ஆத்மா, தந்தையின் உடலில் 2 மாதங்கள் பிண்ட சரீரத்தில் உணவுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. அந்த 2 மாதங்களில் பெற்றதை 11, 12 ஆம் நாட்களில் பஞ்ச பூதங்களில் கரையச் செய்கிறார்கள்.

12 ஆம் நாளன்று அந்தப் பிரேத சரீரத்தை முழுமையாகப் பஞ்ச பூதங்களில் கரைத்து விடுகிறார்கள். இப்பொழுது ஆத்மா மட்டுமே இருக்கிறது. அதைக் ‘கூட்டத்தாரோடு சேர்க்க வேண்டும்’. அந்தக் கூட்டத்தார் யார் என்று பார்த்தால் இறந்தவனுடைய தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகியோர். அவர்களில் இருந்த ஆத்மா வேறு பிறவி எடுத்திருக்க்கூடும். ஆனால் அங்கே சொல்லப்படும் இந்த உறவுகள், ஒரு காலத்தில் பிண்ட சரீரமாக இருந்து இயற்கையில் ஒன்றியுள்ள உணவின் பிண்டத்துகள்களே. ஒரு மனிதன் தனக்கு முந்தின மூன்று தலைமுறையினரிடமிருந்து, தான் வளர பிண்டம் எடுத்துக் கொள்கிறான். பரம்பரையாக வரும் மரபணுக்கள் இதனுள் அடங்கும். இறந்த பிறகு இந்த மூன்று தலைமுறையினருடன் அவன் இணைந்து விடுகிறான். இந்த இணைப்பைச் செய்யச் சொல்லப்படும் மந்திரங்கள் சில ஜியோமிதி வடிவங்களால் இயங்குகின்றன. மூன்று தலைமுறைகளுக்கு வசு, ருத்ரன், ஆதித்தன் என்று பெயரிட்டுள்ளார்கள். அவை எகிப்திய வடிவங்களிலும் காணப்படும்

12 ஆம் நாள் காரியத்தில், சபிண்டிகரணத்தின் போது, முதலில் வலது பக்கத்திலிருந்து சதுரம், முக்கோணம், வட்டம் என்னும் வடிவங்கள் இடப்படும். இவற்றைத் தரையில் நீரால் வரைவார்கள். முதலில் சதுரத்தில் ஒருவரை நிற்கச் செய்து அவர் மீது ‘விஸ்வதேவஸ் என்னும் கடவுளை ஆவாஹனம் செய்வார்கள். இவர் வசு, ருத்ரன் ஆதித்தன் உட்பட இயற்கையில் உள்ள எல்லா தேவர்களுக்கும் அதிபதி. எல்லா தேவர்களுக்கும் பிரதிநிதியாக, இவரைச் சதுர வடிவ அமைப்பில் ஆவாஹனம் செய்வார்கள்,

அடுத்து இருப்பது முக்கோணம். அதில் இறந்தவரது மூன்று தலைமுறைப் பித்ருக்களை மந்திரத்தால் வரவழைத்து ஆவாஹனம் செய்வார்கள், முன்பே நாம் முக்கோணத்தைப் பற்றிப் பேசினதை நினவில் கொண்டு வருவோம்,. முக்கோண அமைப்பில் அதீத சக்திகள் நிலை பெறும் என்றோம். அதே கருத்தில், என்றோ இறந்து போன முன்னோர்களை அவர்கள் அடைந்த வசு, ருத்ர, ஆதித்த ரூபத்தில் முக்கோண அமைப்பில் மந்திரங்கள் மூலமாகக் கட்டுகிறார்கள்.

அடுத்து வருவது வட்டம். அதில் இறந்தவர் (யாருக்காக சடங்கு செய்கிறார்களோ) மந்திரத்தால் நிறுத்தப்படுகிறார். இவர்கள் அனைவருக்கும் அதிபதியாக விஷ்ணுவை, முதலில் இருக்கும் சதுரத்தில் ஆவாஹனம் செய்வார்கள்.

இறந்தவர் தம் முன்னோருடன் சேரும் போது, மூன்றாவது தலைமுறை கொள்ளூத்தாத்தா விலக்கப்படுவார். அப்பொழுதுதான் உயிருடன் இருக்கும் அவரது மகன் (சடங்குகள் செய்பவன்), அவனுடன் தொடர்பு கொண்ட மூன்று தலைமுறையினருக்கு நீர்க் கடன் செலுத்த முடியும். இதைச் செய்யும் மந்திரங்களால், முக்கோண அமைப்பில் இருக்கும், இறந்தவருக்கு மூன்றாவது தலைமுறை கொள்ளூத்தாத்தா விலக்கப்படுகிறார்.

மீதம் இருக்கும் இருவரும், இறந்தவர் இருக்கும் வட்டத்துக்குள் வரவழைக்கப்படுவார்கள. அதில் இறந்தவரைச் சேர்த்து, மூன்று தலைமுறையினர் மட்டுமே நிலை நிறுத்தப்படுவர். இவர்கள், உயிருடன் இருக்கும் சந்த்தியினருக்கும் வசு, ருத்ரன், ஆதித்தன் என்னும் மூன்று தலைமுறையாவார்.

அத்துடன் முக்கோணத்தின் பயன்பாடு முடிந்து விடுகிறது. அதற்கு மேல் எந்த பித்ரு காரியத்திலும் சதுரமும், வட்டமுமே இருக்கும். முக்கோணம் இருக்காது. இயற்கையில் உள்ள அதீத சக்திகளைக் கட்டுவதற்குத்தான் முக்கோணம் பயன்படுகிறது. எங்கோ இருக்கும் வசு, ருத்ர ஆதித்த ரூபத்தில் உள்ள முன்னோர்களை இழுக்க முக்கோணம் பயன்படுகிறது. முக்கோணத்தைப் பற்றி பிறகு நிறைய பேசுவோம்.

பித்ருக்கள் இடம் மாறி முடிவில் விஸ்வேதேவஸில் ஐக்கியமாவதை 3 படிகளாக (STAGES) ஜியோமிதி வடிவங்களில் காட்டலாம். அவை வருமாறு:-

இந்த ஜியோமிதி வடிவங்கள் (சதுரம், முக்கோணம், வட்டம்) என்பவை மந்திர ரூபத்தில் இறந்தவர்களை வழி நடத்த வேத மதத்தில் உண்டானது. இறந்த பின்னும் ஒரு உலகம் இருக்கிறது என்று சொல்லுமிடத்தில், இந்த வடிவங்களை இணைத்து எகிப்திய பாப்பிரஸ் சொல்கிறதே, இது எப்படி சாத்தியமாயிற்று? அந்த வடிவங்களைப் பயன்படுத்தும் சடங்குகளும் விளக்கங்களும் வேத மரபில்தானே இருக்கின்றன? அவை எகிப்திய மரபில் உண்டானவை என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களிடம் அது முழுமை பெற்ற விளக்கமாக இல்லை. இந்த விளக்கங்கள் மற்றும் சடங்குகளைப் பிறரிடமிருந்து கற்றுக் கொண்டோ அல்லது, நாளடைவில் மறந்து விட்டோ அதைப் பற்றிப் பேசுவதாகத்தானே எகிப்திய விளக்கங்கள் இருக்கின்றன?

வேத மரபில் இறந்தவரது முந்தின தலைமுறையினர் முக்கோணத்தை விட்டு, வட்டத்துக்குள் வந்து விடுவர். அதாவது முக்கோணம் வட்டத்துக்குள் அடங்கி விடும்,. அந்த வட்டத்தில் இருக்கும் இறந்தவரும், அவரது முன்னோரும் அது முதல் பித்ரு தேவர்கள் ஆகி விடுகிறார்கள். எந்தத் தேவனுக்கும் அதிபதி, விஸ்வதேவஸ் ஆவார். அவர் ஆவாஹனம் ஆவது சதுரத்தில். இதனால் வட்டம் சதுரத்துக்குள் அடங்கி விடும்.

இது இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் நம்பிக்கையில் எழுப்பட்டுள்ள எகிப்திய பிரமிடுகளது அடிப்படை வடிவமாகும்.

குறிப்பாக முதன் முதலில் உருவாக்கப்பட்ட கீசாவில் உள்ள பெரும் பிரமிடு (GREAT PYRAMID OF GIZA) இந்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஒரே சுற்றளவுடைய வட்டமும், சதுரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து அமைக்கப்படுகின்றன. வேத மரபில் தெய்வ நிலையை அடைந்த மூன்று தலைமுறையினர் (வட்டம்), அந்தத் தெய்வங்களுக்கு அதிபதியான விஸ்வதேவஸில் (சதுரம்) ஐக்கியமாகின்றனர் என்னும் கருத்து இங்கே பிரதிபலிக்கிறது.

இந்த வட்டத்தின் ஆரத்தை, உயரமாகக் கொண்டு கீசா பிரமிடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு-பரிமாண வடிவத்தில் இது முக்கோணமாகத் தெரியும், முக்கோணத்தில் அதீத சக்திகளும், இறந்தோரது உயிர்ச் சக்தியான பிண்ட சரீரமும் வரவழைக்கப்படுகிறது என்பது வேத மதக் கருத்து. அதை மந்திரங்களால் செய்கிறார்கள். அதை அறியாத ஒரு சமூகம், முக்கோண அமைப்பில் கட்டடம் எழுப்பி அதில் இறந்தவரைக் கிடத்தினால், அவர் ஒருநாள் உயிர் பெற்று விடுவார் என்று எண்ணியிருக்கிறது.

ஆதி சங்கரர் கூறுவது என்ன:

ஆதிசங்கர இயற்றிய நிர்வாண ஷடகம் (விடுதலை ஆறு) நாம் யார், நம் இறப்புக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.

மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்
நச ஸ்ரோத்ர ஜிஹ்வே நச க்ஹ்ரா ந நேத்ரே
நச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்

நான் மனமும், புத்தியும், அஹங்காரமும், சித்தமும் அல்ல
நான் காதும், நாக்கும், மூக்கும், கண்ணும் அல்ல
நான் ஆகாயமும், பூமியும், தீயும், காற்றும் அல்ல
விழிப்பும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவன் நான், சிவமே நான்;

நச பிராண சம்ஜ்னோ ந வை பஞ்ச வாயு
ந வா சப்த தாதூர் ந வா பஞ்ச கோஷ
ந வாக் பாணி பாத்ஹவ் ந சோபஸ்த பாயு
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்

நான் பிராணன் அல்ல, ஐந்து வாயுக்களும் அல்ல
நான் ஏழு தாதுக்களும் அல்ல, ஐந்து கோசங்களும் அல்ல
நான் பேச்சும், கையும், பாதாமும், பிறப்புறுப்பும், குதமும் அல்ல
விழிப்பும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவன் நான், சிவமே நான்;

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹொவ்
மதோ நைவ மே நைவ மாத்சர்ய பாவ
ந தர்மோ ந சார்தோ ந காமோ ந மொக்ஷஹ
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்குள் விருப்பும், வெறுப்பும் இல்லை, பேராசையும், மனமயக்கமும் இல்லை
எனக்குள் கர்வமும் பொறாமையும் இல்லை
எனக்குள் கடமைக்கான தேவையோ, பொருள், காலம் மற்றும் முக்திக்கான ஆசையோ இல்லை
விழிப்பும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவன் நான், சிவமே நான்;

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதோ ந யஜ்னஹா
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்கு புண்ணியமும் பாவமும் இல்லை, இன்ப துன்பமும் இல்லை
எனக்கு மந்திரங்களும், தீர்த்த யாத்திரைகளும், வேதங்களும், யாகங்களும் தேவையில்லை
நான் புசிக்கப்படுவதில்லை, புசிக்கும் செயலும் இல்லை, புசிப்பதுமில்லை,
விழிப்பும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவன் நான், சிவமே நான்;

ந மே மிருத்யு சங்க ந மே ஜாதி பேத
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம
ந பந்துர் ந மித்ரம் குரூர் நைவ ஷிஷ்யாஹ்
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்கு மரண பயமில்லை, ஜாதி பேதங்களில்லை
எனக்கு தாயில்லை, தந்தையில்லை, ஏனெனில் நான் எப்போதும் பிறந்ததுமில்லை
நான் உறவினனுமில்லை, நண்பனுமில்லை, நான் குருவுமில்லை, சீடனுமில்லை
விழிப்பும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவன் நான், சிவமே நான்;

அஹம் நிர்விகல்போ நிராகர ரூபஹா
விபுர் வ்யாப்ய சர்வத்ர சர்வ இந்த்ரியாணாம்
ந ச சங்கதம் நைவ முக்திர் ந மேய
சித்தானந்தா ரூப ஷிவோஹம் ஷிவோஹம்

நான் மாறுபாடு இல்லாதவன், உருவமற்றவன்
நான் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறேன், நான் உணர்வுகளுமில்லை
எனக்கு பற்று என்பதில்லை, சுதந்திரமோ கட்டுப்பாடோ இல்லை
விழிப்பும், ஆனந்தமும் உருக்கொண்ட சிவன் நான், சிவமே நான்;

இஸ்லாமிய மார்க்கம்  கூறுவது என்ன:

இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர்களை எரித்துவிடாமல், மண்ணில் புதைப்பார்கள்.

ஏனெனில் இஸ்லாத்தைப் பொறுத்தவரை மனித உடலில் உள்ள ஆக்கக்கூறுகள் மண்ணிலும் இருக்கின்றது. மனித உடலில் காணப்படும் தனிமப் பொருட்கள் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ மண்ணிலும் இருக்கின்றது. ஆகவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பது அறிவியல் ரீதியாக மிகச் சிறந்ததாகும். அவ்வாறு செய்வதால் இறந்து போன உடல் மிக எளிதாக மட்கிப் போய், மண்ணோடு மண்ணாக கலந்து விடும்.

சுற்றுப்புறச்சூழல் மாசுபடுத்தப் படுவதில்லை. இறந்த உடலை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட காற்று, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், சுற்றுப்புறச் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பதால், சுற்றுப்புறச் சூழல் மாசு படுத்தப் படுவதில்லை.

சுற்றியுள்ள நிலம் வளம் பெறுகிறது: இறந்து போன உடலை எரிப்பதற்கென ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் பூமியின் பசுமைத் தன்மை குறைந்து வருகிறது. அத்துடன் மேற்படி செயல் சுற்றுப் புறச் சூழலுக்கு தீங்காக அமைவதுடன், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் இயற்கைச் சூழலும் பாதிப்படைகிறது. ஆனால் இறந்து போன உடல் மண்ணில் புதைக்கப்படுவதால், ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படுவதுடன், புதைக்கப்படும் இடத்தை சுற்றியுள்ள நிலமும் வளம் மிக்கதாக மாறி சுற்றுப் புறச் சூழலையும் மேம்படுத்துகிறது.

மிகக் சிக்கனமானது: இறந்து போன உடலை எரிப்பதற்கு, குவிண்டால் கணக்கில் விறகுகள் வீணாக்கப்படுகின்றது. இந்தியாவில் இறந்து போன உடலை எரிப்பதற்கு மாத்திரம் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்படுகிறது. ஆனால் இறந்து போன உடலை, மண்ணில் புதைக்க மிகக் குறைந்த செலவுதான் ஆகும். எனவே இறந்து போன உடலை மண்ணில் புதைப்பது, மிகச் சிக்கனமானது.

இறந்து போன உடல்களை புதைப்பதற்காக மீண்டும், மீண்டும் ஒரே நிலத்தை பயன்படுத்தலாம். இறந்து போன உடலை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விறகுகளை, மீண்டும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இறந்து போன உடலை எரிக்கும்போது விறகுகள் சாம்பலாகி விடும். ஆனால் இறந்து போன உடலை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நிலத்தையே – மீண்டும் சில வருடங்கள் கழித்து வேறொரு உடலை புதைக்க பயன்படுத்த முடியும். ஏனெனில் புதைக்கப்பட்ட மனித உடல் மக்கி, மண்ணோடு மண்ணாக கலந்து விடும்.

தொடரும்…

Please follow and like us:

One thought on “மரணத்திற்கு அப்பால் (பகுதி 3)

  • May 29, 2018 at 9:33 pm
    Permalink

    மிக மிக அருமியான பதிவு. இன்னமும் அதிகம் இது சார்ந்த கருத்துக்களை எதிர் பார்க்கிறோம்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!