மரணத்திற்கு அப்பால் (பகுதி 2)

மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை நசிகேதன் என்பவர் எமதர்மனிடம் உபநிஷ்ய முறையில் கேட்டு தெரிந்துக் கொண்டார் என்று இந்து மதம் கூறுகிறது.

உபநிஷ என்றால் அருகில் அமர்தல் என்று பொருள். குருவும் சீடனுமாக அருகருகே அமர்ந்து ஞானத் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற வேத ரிஷிகளின் அனுபவங்களிலிருந்து வெளிப்பட்ட நூல்களே உபநிஷதங்கள்.

உபநிஷதங்கள் 108 என்று கூறப்பட்டாலும், வேதாந்த தத்துவத்தில் “முக்கிய உபநிஷதங்கள்” என்று சொல்லப்படுபவை 10. மட்டுமே இவற்றில் 8 உபநிஷதங்கள் மிகவும் முக்கியமானவை. அவை

  1.  ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
  2. கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
  3. கட உபநிஷதம் (மரணத்திற்குப் பின்னால்)
  4. ப்ரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
  5. முண்டக உபநிஷதம் (நிழலும் நிஜமும்)
  6. மாண்டூக்ய உபநிஷதம் (ஒன்றென்றிரு)
  7. ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
  8. தைத்திரீய உபநிஷதம் (வாழ்க்கையை வாழுங்கள்)

நசிகேதன் யார்? 
நசிகேதன் என்பவர் வாஜஸ்ரவஸ் என்னும் மன்னனின் மகன். வாஜம் என்றல் அன்னம் அல்லது உணவு என்றும் ஸ்ரவஸ் என்றால் கீர்த்தி என்றும் பொருள். வாஜஸ்ரவஸ் என்றால் அன்னதானத்தால் கீர்த்தியடைந்தவன் என்று அர்த்தம்.

ஒரு முறை வாஜஸ்ரவஸ் சுவர்க்க பதவியை அடைவதற்காக விச்வஜித் என்னும் மகத்தான யாகம் செய்கிறார். இவ்வாறு யாகம் செய்யும் பொழுது ஒருவர் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்து விட வேண்டும். யாகத்திற்கு கொடுக்கப் படும் பொருளும் அதை பெறுபவரும் அதனால் சிறப்படைய வேண்டும் என்பது நியதி. ஆனால் வாஜஸ்ரவஸ் உபயோகமற்ற வயது முதிர்ந்த மாடுகளை பேருக்கு தானம் செய்வதைக் கண்ட நசிகேதனுக்கு கவலையுண்டாயிற்று. ஏனென்றால் இப்படிப்பட்ட தானங்கள் செய்பவர்கள் ஆனந்தமில்லாத உலகத்தை அடைவார்கள். தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விடுவதற்கு பதிலாக தனக்கு உபயோகமில்லாத பொருட்களை மட்டும் தானம் செய்யும் தந்தையின் தவறைக்கண்டு வெகுண்டு எழுந்தான்.
மேலும் “எல்லாவற்றையும்” (சர்வ) என்றால் புத்திரர்களும் அதில்ப்படும். ஆனால் தன்னை யாருக்கும் தானம் கொடூக்க தந்தை முயலவில்லை என்பது அவனுக்கு மேலும் கோபத்தை மூட்டியது..

ஆகவே தந்தையை நோக்கி தந்தையே “”தாங்கள் செய்கின்ற யாகம் தங்களுக்கு சர்வ ஐஸ்வரியங்களையும் நல்கட்டும். என்னை எவருக்கு தானமாக வழங்கப்போகிறீர்கள்” எனக் கேட்டான். அவனுடைய கேள்விக்கு வாஜஸ்ரவஸ் பதிலளிக்கவில்லை.நசிகேதன் இரண்டாவது முறையும் கேட்டான் பதிலில்லை. வாஜஸ்ரவஸ்ருக்கு கோபம் ஏறிக்கொண்டே போயிற்று. மூன்றாவது முறை நசிகேதன் அதே கேள்வியை கேட்ட பொழுது,அவர் உன்னை யமனுக்கு கொடுக்கப் போகிறேன்.”ஏன்றார். நெல்லை அள்ளினாலும் அள்ளலாம் கொட்டிய சொல்லை அள்ள முடியாது. அதிக பூஜா பலன் பெற்றவர்கள் உதிர்க்கும் சொற்கள் பலித்தும் விடும். அடுத்த நிமிடமே வாஜஸ்ரவஸ்க்கு தன் தவறு புரிந்தது.”கோபத்தில் என்ன சொல்லிவிட்டேன்? இதை எப்படி சரி செய்வது?” என்று யோசிக்கலானார்

நசிகேதனுக்கு வாஜஸ்ரவஸ் சொன்ன சொல்லை திரும்ப பெறும் எண்ணத்திலுள்ளார் என்று புரிந்தது. அதனால் அவர் தந்தையிடம் சென்று, “என்னருமை தந்தையே, சற்றே சிந்தித்து பாருங்கள். நம் முன்னோர்கள் உண்மையை கூறி பெயரும் புகழும் அடைந்துள்ளார்கள்.நீங்களும் அப்படியே இது வரை வாழ்ந்து விட்டீர்கள். உண்மைக்கு விபரீதமாக கர்மங்கள் செய்பவர்கள் மற்ற செடிகொடிகள் போல் “மரணம், மீண்டும் ஜனனம்,மீண்டும் மரணம்,மீண்டும் ஜனனம்” என்ற சுழலில் சிக்கி மீளாத துயரத்திற்கு ஆளாவார்கள்.அந்த நிலைமைதங்களுக்கு வர வேண்டாம் நீங்கள் சொன்ன சொல் உண்மையாகட்டும்; என்னை யமனிடமே அனுப்பி வையுங்கள்” என்றான்….

நசிகேதன் யமலோகத்தைச் சென்றடைந்தான். அங்கே யமன் இல்லாததால், நசிகேதஸ் பொறுமையாக மூன்று நாட்கள் யமனுக்காக வாசலிலேயே காத்திருந்தான். வெளியில் சென்றிருந்த யமன் திரும்பி வந்ததும், தன் வீட்டிற்கு வந்த ஒரு அதிதி( விருந்தாளி) பட்டினியாக மூன்று நாட்கள் இருந்திருக்கிறான் என்றறிந்ததும் அவனுக்கு மிகவும் கவலையாயிற்று.

அதிதி என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு சொல்லாமல் அல்லது அழைக்காமல் வந்துள்ள விருந்தாளி என்று பொருள். திதி என்பது உருமாறி தியதி என்று சொல்லப் படுகிறது. நமது முன்னோர்கள் அழைப்பில்லாமல் வருபவர்களுக்கு உணவு கொடுக்கா விட்டால் அந்த குடும்பமே நாசமடைந்து விடும் என்று நம்பினார்கள்.ஆகவே அப்ப்டி வருகின்ற அதிதிகளுக்கு முன்னுரிமையளித்தார்கள். அச்சிறுவனைத் தான் மூன்று நாட்கள் காக்க வைத்ததால் வந்த பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காக, ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரம் என்ற முறையில் அவனுக்கு மூன்று வரங்களை அளிப்பதாக வாக்களித்தார்.

கடோபனிஷத்திலுள்ள எட்டாம் சுலோகத்தில் அதிதியை கவனிக்காமல் இருந்தால் என்னாகும் என்பதை தெளிவாக வீளக்குகிறார்கள்

திஸ்ரோ ராத்ரீர்யதவால்ஸீர்க்ரிஹே மே-
அன்ஸ்னன் ப்ர்மன்னதிதிர்ணமஸ்ய:
நம்ஸ்தே அஸ்து ப்ரமன் ஸ்வஸ்தி மே அஸ்து
தஸ்மாத் ப்ரதி த்ரின் வரான் வ்ரிணீஷ்வ.

எம தர்மராஜனின் வேண்டுகோளுக்கு இணங்கி நசிகேதன் மூன்று வரங்களை கேட்டார்.

முதலாவது வரம் : “என்னுடைய தந்தையாகிய வாஜஸ்ரவஸ் யமராஜனிடம் சென்ற மகன் என்ன செய்கிறானோ என்ற கவலைகள் ஏதுமில்லாமல் சாந்தியோடு என்னிடம் எந்த விதமான கோப்முமில்லாமல் மரண வாயிலிலிருந்து திரும்பி செல்கின்ற என்னைக் கண்டு,மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும்” என்று கேட்டார். எம தர்மராஜனும் சிறிதும் தயங்காமல் அந்த வரத்தை தந்தருளினார்.

இரண்டாவது வரம்: “சுவர்க்க லோகத்தில் தேவர்கள் முதலியோர் பசியோ தாஹமோ,ஜரா நரையோ மரண பயமோ வேறு எந்த விதமான துக்கங்களோ இல்லாமல் வாழுகிறார்கள். அப்படிப்பட்ட சுவர்க்க லோகத்தை அடைவதற்கு ஏதுவான அக்னியை நீவிர் ஆராதிக்கின்றீர்.அந்த அக்னி தத்துவத்தை எனக்கு தாங்கள் உபதேசிக்க வேண்டும்” என்று கேட்டார். எம தர்மராஜனும் உடனே அதனை தந்தருளினார்

மூன்றாவது வரம்: “இறந்த பிறகு என்ன ஆகிறது, சிலர் மனிதன் வாழ்க்கை முடிந்தது, அவன் உயிரும் இறந்தது என்கின்றனர். சிலர் உடல் இறந்தாலும் உயிர் இறப்பதில்லை என்கின்றனர்…இறந்த பின் உண்மையில் நடப்பது என்ன” என்று கேட்டார். இதனைக் கேட்டதும் எம தர்மராஜன்,

நூறு வருடங்கள் வாழக்கூடிய புத்திரர்களையும், பேரன்களையும் கேள். – தருகிறேன்
பசுக்களையும், குதிரைகளையும் மற்றும் யானைகளையும் கேள் – தருகிறேன்
நிறைய தங்கத்தையோ அல்லது பரந்த நிலங்களையோ கேள் – தருகிறேன்.
உன் விருப்பம் போல் எத்தனை ஆண்டுகளானாலும் வாழ்ந்துக் கொள்.
இவற்றிற்குச் சமமான வேறு ஏதாவது வரத்தைக் கேட்க ஆசைப்பட்டாலும் கேட்டுக் கொள். அல்லது பெரிய இராஜ்ஜியத்திற்கு உன்னை அதிபதியாக்குகிறேன். எல்லாப் போகங்களையும் அனுபவிப்பதற்கு ஏற்றவாறு உன்னைத் தயார் செய்கிறேன்

அடைவதற்கு மிக துர்லபமான பொருள்களையும் உனது விருப்பம் போல் கேட்டுக் கொள்.
ரதங்களோடு மற்றும் இசைக் கருவிகளோடு கூடிய மானிடர்களால் அடைய முடியாத தேவலோகத்துக் கன்னிகைகள் இங்கு இருக்கிறார்கள்; வேண்டுமானால் நீ, அவர்களுடைய சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், உடல் நீங்கியபின், அதனின்று வேறுபட்டது ஏதாவது இருக்கிறதா என்று கேள்வியைப் பற்றி மட்டும் கேட்காதே.” என்றார்.

ஆனால் நசிகேதனோ, எம தர்மராஜனே, உங்களால் இது வரையில் சொல்லப்பட்ட அத்தனைப் போகங்களும் முடிவில் மறையக்கூடியவை. மேலும், அவை மனிதனுடைய இந்திரிய சக்தியை வீணாக்கி விடுகின்றன. கடைசியில், விதிவிலக்கு இன்றி, இவை எல்லாமே ஒரு நாள் முடிவடைந்து போவதால், இவை அற்ப ஆயுளைக் கொண்டது! ஆகையால், இவையெல்லாம் தங்களுடையவைகளாகவே இருக்கட்டும்” நான் கேட்ட வரம்தான் எனக்கு வேண்டுமென்று வற்புறுத்தினார்.

எம தர்மராஜனோ நசிகேதா, பிரபஞ்சத்தின் ஆதியில் தேவர்களுக்கு கூட இந்த சந்தேகத்திற்கு விடை தெரிந்ததில்லை. மரண ரகசியம் சாதாரண மானிடர்களுக்கு சொன்னாலும் புரியாது. ஏனென்றால் ஆன்மா என்பது மிகவும் சூக்ஷ்மமான விஷயம்..ஆகவே வேறு ஏதாவது கேள் கொடுக்கிறேன் என்று சொல்லிப் பார்த்தார். நசிகேதர் விடுவதாய் இல்லை. ஆதலால் எம தர்மராஜன் மூன்றாவது வரத்திற்கு விளக்கம் அளிக்கத் தொடங்கினார்.

நசிகேதா! பிறப்புக்கும், இறப்புக்கும் ஆத்மாவே (ஆன்மா) காரணம். “இந்த ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை. இது எதிலிருந்தும் உண்டாவதில்லை. இதிலிருந்தும் எதுவும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது. என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது. உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது”.

நசிகேதா! தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மையை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை, அடிபடுவதும் இல்லை.”

“நசிகேதா! அணுவைவிட அணுவானதும், பெரியதை விடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களில் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான். மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான்.” ஆன்மாவை அனுபவித்தே அறிந்து கொள்ள முடியும். வெறும் விளக்கங்களால் புரிந்து கொள்ள முடியாதது. உலகியல் மனிதர்களால் கூறப்படும் போது இந்த ஆத்மா பற்றிய விபரங்கள் நன்றாக அறியப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் வெவ்வேறு விதமாக விளக்கிவிடுகின்றனர். பூலோக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கித்தவிக்கும் யாருக்கும் ஆத்மாவைப் பற்றிய தேடலுக்கு நேரமிருக்காது. அவ்வாறு தேடுபவர்கள் மிகச்சிலர் இருந்தாலும் அவர்களுக்கு உபதேசிக்க, ஆன்மா பற்றி உணர்ந்தரிந்தவர்கள் இருக்கமாட்டார்கள். ஆன்மாவைப் பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம். கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்.”

பொதுவாக புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்கம் கிடைக்கும் என்று சொல்வார்கள். புண்ணியம் செய்தல் என்பது நீங்கள் ஆற்றும் வினைப் பயன். அவற்றால் மேலான ஒரு வாழ்க்கை கிடைக்கும். ஆனால் பிறப்பற்ற தன்மையான ப்ரம்மத்தை அடைதல் நடக்காது. நிரந்தரமான பரப்பிரம்மத்தோடு கலக்கவேண்டுமானால் ஆத்மாவை உணரவேண்டும்.

மோட்சத்திற்கு வழிவகுக்கும் ஞானம் வேறு, இதனை வித்யை என்பர். பூலோக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு உபயோகப்படக்கூடிய அறிவு வேறு. இதனை அவித்யை என்பர். அவித்யை மனிதனை பலவித பந்தத்திற்கு உட்படுத்துகிறது. ஞானத்தினால் உளவாவது ஸ்ரேயஸ்ஸும் எனப்படும். அறிவினால் உளவாவது ப்ரேயஸ்ஸும் எனப்பம். ஸ்ரேயஸ்ஸின் மற்றும் ப்ரேயஸ்ஸின் கூக்குரல் நம் மனதில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டு தானிருக்கும். ஒன்று மற்றதை அடக்க முயலும். ஸ்ரேஅஸ் எப்பொழுதும் பற்றின்மையை போதிக்க முயலும். ப்ரேயஸ்ஸோ பூலோகத்தில் கிடைக்கக் கூடிய சிறிதும் பெரிதுமான சுகங்களை நினைவு படுத்தி நம்மை மேல்மேலும் பூலோக சுகங்களை இச்சிக்க வைக்கிறது. பெரும்பான்மையானோர் ப்ரேயஸ்ஸை விரும்பி பூலோக சுகங்களை நாடுகிறார்கள். ஏனெனில் அந்த சுகங்களைத் நாம் எளிதில் அடையவும் உணரவும் முடிகிறது. ஆனால் ஸ்ரேயஸ்ஸினால் நமக்கு கிடைக்கும் ஆனந்தம் கண்ணுக்கும், நம் புலங்களுக்கும் புலப்படுவதில்லை. மேலும் ஸ்ரேயச்சுக்கான மார்க்கம் கடினமானது. பூலோக சுகங்களுக்கான வழி எளிதாகத் தோன்றுவதால் , அதன் விளைவுகள் துன்பம் விளைவிக்கின்றது.

ஸ்ரேயஸ்ஸை வேண்டுகிறவன் அறிவாளி;ப்ரேயஸ்ஸை விரும்புகிறவன் மூடன். மேலும் எம தர்மராஜன் மரணத்தை புரிந்துகொள்வத்ற்கான முதல் படி – ஆன்மா என்று கூறுகிறார். ஆன்மா தான் எல்லா கர்மங்களுக்கும் கர்த்தா. மமதை அடங்காத சாதாரணமவர்களால் இது என்ன என்று உபதேசிக்க முடியாது. தானன்றி வேறில்லை என்று உணர்ந்த ஞானி ஒருவனால்த் தான் ஆத்மோபதேசம் செய்ய இயலும். ஆத்மா என்பது அணுவிலும் சிறிதாக இருப்பதால் அவ்வளவு எளிதாக விளக்கவும் முடியாது;விளங்கிக்கொள்ளவும் முடியாது. அதை காண்பது அவ்வளவு எளிதல்ல,; அது இருக்குமிடமும் மிகவும் மறைவான குகை போன்ற இடம். ஆத்மா வெறும் காரண காரிய வாதங்களால் விளக்க முடியாது. அத்மாவை தன் புத்தியினால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது. அதே போல் அனசுவரமான நாசமில்லாத ஆத்மாவை நசிக்ககூடிய பௌதிக பொருட்களை அர்ப்பிபதன் மூலம் அடைய முடியாது.

ஆத்மா தோன்றும்பொழுது ராகம் துவேஷம் முதலிய இந்திரிய உற்பன்னங்களான விகாரங்களால் உற்பத்தியாகின்றன. இன்ப துன்பங்களின் சுழலில் சிக்குவதால், அதன் பாதையில் கல்லும் முள்ளும் நிறைந்தும் கிடக்கின்றது; ஆகவே ஆத்மாவை தேடிக் கண்டுபிடிப்பதற்கான ஒரே மார்க்கம் அத்த்யாத்மிக யோகம் தான். “நான் யார்” என்று தேடிச் சென்று ஆன்மாவை கண்டுவிட்டால், அதோடு கண்டுபிடிப்பவனுக்கு இருந்த சந்தோஷம் துன்பம் முதலிய விகாரங்கள் நீங்கி விகார விசார ரஹிதனாகிறான்; அத்யாத்மிக யோகம் என்பது நமது கவனத்தை முழுவதுமாக மற்ற எல்லா விஷயங்களிலிருந்தும் விடுவித்து ஆத்மா என்கின்ற ஒன்றில் மட்டும் ஊன்றி சிந்திப்பதாகும்அந்த ஆத்மா யார் என்று தெரிந்து கொண்டு விட்டாலோ நம் உயர்ச்சியோ மற்றவர்களின் விழ்ச்சியோ எதுவும் ஆத்மாவை பாதிக்காது. ஆகவே இன்பமும் கிடையாது; துன்பமும் கிடையாது;  அப்பொழுது நாம் காண்பது எல்லாம் ஆத்மாவே தான்; நம்மிலும்,நாம் காண்கின்ற எல்லாவற்றிலும் ஆத்மாவை –அதாவது பிரம்மத்தை காண்போம்; இதற்கப்புறம் மரணமும் கிடையாது ; ஜனனமும் கிடையாது; இன்னொரு விதத்தில் சொன்னால் இது தான் நிஜமான மரணம்’ நான்’ இங்கு இல்லாதாகிவிடுகிறது. ஆகவே இது தான் மரணம்.

நிறைவேறாத ஆசைகள் உள்ள ஆத்மா உடல் இறந்த பின்பு இன்னொரு வாடகை வீட்டைத் தேடி போகும்; அந்த வீட்டில் குடியேறும்; மீண்டும் அந்த சக்கர சுழற்சி ஆரம்பிக்கும்; நாம் ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அடையாளம் காணும் வரை நாம் வீடு மாறிக் கொண்டேயிருக்க வேண்டியது தான். மனிதன் ஆடைகள் பழையதாகும் பொழுது அவைகளை களைந்துவிட்டு புதிய உடைகளை அணிந்து கொள்வது போல் ஆத்மாவானது பழைய உடல்களை நீத்துவிட்டு புதியன புகுகிறது. இதனைத் தான் நாம் பிறப்பு மற்றும் இறப்பு என்கிறோம். பகவான் கிருஷ்ணர், பகவத் கீதையில் ஆத்மாவை எந்த ஆயுதங்களும் காயப் படுத்தாது. அக்னி அதை எரிக்காது; நீர் நனைக்காது; காற்று அதை பலவீனப்படுத்தாது என்று கூறுகிறார். ஆத்மா எதோடும் பந்தப்படாதது. எப்பொழுது சரீரம் தான் ஆத்மா என்று நினைக்கின்றோமோ அப்பொழுது எல்லாவித பாதகங்களும்,மரணமும் உண்டாவது போல் நாம் அனுபவிக்கிறோம். இந்த உலகில் நித்தியமானது எதுவுமில்லை. இறப்பும் பிறப்பும் உண்டென்றால் யாராலும் அதை தடுத்த நிறுத்த முடியாது. அப்படி நம்மால் இயலாத ஒரு செய்கைக்காக நாம் வருந்தலாகாது. ஆத்மாவின் முடிவு, கடவுளுடன் பரிபூரண இணைப்பு.

ஆத்மா என்பது சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதயக்குகையின் இருண்ட பகுதியில் ஒளிர்வது. பழமையானது. புத்தி விழிப்புற்றவன் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்ப துன்பங்களைக் கடக்கிறான்.” இதயக்குகை என்பது உடம்பிற்கு உள்ளே ரத்த ஓட்டத்தை சீர்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் இதயம் இல்லை. இது ஆன்மீக இதயம். ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் சக்தி மையம். தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இருக்கும் இடம் தான் இதயக் குகை. மார்பின் மத்தியில் இருக்கும் சக்தி மையம். இது சுடர் விடும் தன்மை கொண்டது. இது பிரகாசமானது.

பெரும்பாலானவர்கள் இந்த மையத்தை உணரும் வகையில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானிப்பது இல்லை. புறப்பொருள்களில் இருந்து விலகி மனத்தை அமைதியாக்கி இதை உணர வேண்டும். புறப்பொருட்களால் சலனமடையாமல், உணர்ச்சி மோதல்களில் ஆட்படாமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானித்தால் அக உலகம் ஒன்று இருப்பதை நாம் உணர்வோம்.

இத்தகைய அமைதிப் பிரதேசத்தை உனரத் தொடங்கிவிட்டால் புற உலகம் நம்மைப் பாதிப்பது படிப்படியாக குறைந்து விடும். இந்நிலையை அடைந்தவர்களையே இன்ப துன்பங்களைக் கடக்கிறவர்கள். இந்த உண்மையைத் தகுந்த குருவிடமிருந்து கேட்டு, ஆராய்ந்து அறிய வேண்டும். பிறகு, உடம்பிலிருந்து ஆத்மாவைப் பிரித்து உணர வேண்டும். அணு போன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாரு பிரித்தரிபவன் ஆனந்தம் பெறுகிறான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு உடல்கள் இருக்கின்றன. அவை நம் புற உடல். நம் கண்களால் பார்க்க முடியும். இரண்டாவது அக உடல் அல்லது மாய உடல். அதை கண்களால் பார்க்க முடியாது. இந்த இரண்டும் நம்முடனேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் உடல் சக்தியை சத்துள்ள காய்கறிகளும் உணவும் உட்கொள்வதால் பெறலாம். மாய உடலின் சக்தியை அதை உணர்வதால் மட்டுமே பெற முடியும்.

உடலின் இயக்கத்திற்கு மூளை சக்தியாக இருக்கிறது என்பதை புறப்பொருள் இயக்கங்களால் உணர முடியும். மாய உடலின் சக்தியை இயக்குவதும் அதன் மூலமாக இருப்பதும் ஆத்மாவே ஆகும். இத்தகைய புற உடலுக்கும் அக உடலுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருப்பதே எண்ணங்கள் அல்லது மனம். அதனால் தான் மனம் அல்லது எண்ணங்கள் புறத்தே தெரிவதில்லை. ஆனால் அவற்றின் ஆற்றலை புற உடலால் உணர முடிகிறது. அதாவது அவற்றால் உண்டாகும் தாக்கத்தை புற உடல் மூலமாக வெளிப்படுத்த முடிகிறது.

அதனாலேயே அக உடலை அடைவதற்கான ஒரே வழியாக எண்ணங்களை குறிப்பிடுகிறார்கள். மனத்தை அமைதிப்படுத்தினால், எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் அது நம்மை அக உடலான மாய உடலுக்கு அழைத்துப் போகும். அவ்வாறு எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மனத்தை உள்புறமாக செலுத்தி தியானிப்பவர்களுக்கு உடலுக்கு உள்ளே இருக்கும் ஆத்ம சுவரூபம் தெரியத்துவங்கும். அக உடல் வேறும், புற உடல் வேறாகவும் புலப்படும். இவ்வாறு மாய உடலையும் அதை இயக்கும் சக்தியான ஆத்மாவையும் புற உடலில் இருந்து பிரித்து அறிபவன் ஆனந்தம் அடைகிறான்.

மரணம் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வின் போது உடலும் மனமும் ஒரு வித அவஸ்தைக்கு உள்ளாகிறது என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மாவை உணர்ந்து அதனோடு ஒன்றிப் போகிறவன் உடல் வேறு ஆன்மா வேறாகப் பிரியும் தருணத்தை உணரமாட்டார்கள். எனவே அவர்கள் மரணம் என்கிற அவஸ்தையிலிருந்து விடுபடுகிறார்கள். ஏனெனில் ஏற்கனவே அவர் ஆன்மாவாகவே வாழ்ந்து கொண்டிருப்பதால் உடலை விட்டுப் பிரியும் போதும் மரணம் என்று உணராமலேயே வாழ்ந்துகொண்டே இருக்கும் நிலையை அடைவார்கள்.

எந்தப் பொருளை எரித்தாலும் நெருப்பு ஒரே வடிவானதாகவே இருப்பது போல், ஆன்மா மனிதன், விலங்குகள், பறவைகள் மற்றும் செடி கொடிகள் அனைத்திலுமே ஒரே தன்மை உடையதாகவே இருக்கும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!