திருமாளிகைத் தேவர்

திருவிடைமருதூரில் சுத்த சைவ வேளாளர் பரம்பரையில் பிறந்தவர் திருமாளிகைத் தேவர். இவர் ஆதிசைவ (சிவப்பிராமண) குலத்தில் தோன்றியவர் என்றும் கூறுவர். பரம்பரை வழக்கப்படி அப்போதைய சோழ அரசருக்கு திருமாளிகைத் தேவர் குருவாக இருந்தார்.

காலையில் எழுந்ததும் தன் குல வழக்குப்படி அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, கோவிலுக்கு சென்று சிவா பெருமானையும், அம்பிகையையும் வணங்கிவிட்டு, சுவாமிக்குப் படைத்த நெய்வேதியம் செய்த பிரசாதத்தை மட்டுமே சாப்பிடுவது திருமாளிகைத்தேவரின் தினசரி வழக்கம். அரண்மைனயில் பணிபுரிந்தாலும், எப்பொழுதும் சிவப் பெருமானையே நினைத்துக் கொண்டிருப்பார்.

போகர், திருவாடுதுறைக்கு வந்திருந்ததை அறிந்த திருமாளிகைத்தேவர், அவரிடம் உபதேசம் பெற சென்று, போகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். திருமாளிகைத்தேவரின் பக்குவ நிலையை உணர்ந்த போகர் அவருக்கு ஞான நிலையை உபதேசித்தார். போகரின் வழிகாட்டுதல் படியே திருமாளிகைத்தேவர் தன் தவ வாழ்கையை நடத்தியதால் திருமாளிகைத் தேவரின் உடல் தங்கம் போல் ஜொலித்தது. இதைக் கண்ட ஆண்கள் ஆசிரயப்பட்டார்கள். பெண்கள் மனதில் திருமாளிகைத் தேவரின் உருவம் பதிந்தது. இதனால் பெண்கள் பெறுகிற குழந்தைகள் திருமாளிகைத்தேவரைப் போலவே இருந்தனர். இதனால் பெண்களின் கணவர்கள், மனைவி மேல் சந்தேகம் கொண்டனர்.

அச்சமயம் பல்லவ மன்னன் காடவர்கோன் கழற்சிங்கருக்குக் கப்பம் கட்டும் சிற்றசர்களில் ஒருவரான நரசிங்கர், திருவாடுதுறைக்கு அருகில் இருக்கும் பேட்டையில் தங்கினார். இவ்வழியே போகும் பொழுதெல்லாம் அவர் இங்கு தங்கியதால் இவ்விடம் நரசிங்கன்பேட்டை என்ற பெயர் பெற்றது.

இதை அறிந்த ஆண்கள் மன்னனிடம் சென்று “மன்னா திருமாளிகைத்தேவன் யாருக்கும் தெரியாமல் வந்து பெண்களின் கற்பை எல்லாம் பாழ்படுத்துகிறான். இதனை நிறுத்த வேண்டும். நீங்கள் தான் அவனை தண்டிக்க வேண்டும் என்று முறையிட்டனர். இதைக் கேட்டவுடன் மன்னனுக்கு கோபம் உண்டானதால், வீரர்களை அழைத்து திருமாளிகைத்தேவனை கட்டி இழுத்து வாருங்கள் என்று ஆணையிட்டார்.

வீரர்கள் திருமாளிகைத் தேவரை நெருங்கிய பொழுது, அவர்களின் நோக்கத்தை அறிந்த திருமாளிகைத் தேவர், “ம்… ஆகட்டும்! கட்டிக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். திருமாளிகைத் தேவரின் மந்திரம் போன்று மென்மையாக ஒலித்த அந்த சொற்கள் வீரர்களை மயகியதால், வீரர்களே தங்களை தாங்களே கட்டிக் கொண்டு நரசிங்கர் முன்னால் பொய் நின்றார்கள்.

இதைப் பார்த்த மன்னர் மேலும் கோபமுற்று, “சிந்தையை மயக்கும் அந்த கொடியவனை நீ போய் சிதைத்து விடு. அவன் இனி உயிருடன் இருக்கக் கூடாது” என்று தன் தளபதிக்கு உத்தரவிட்டார். தளபதியும் திருமாளிகைத்தேவரின் தலையை சீவிக் கொண்டுத் தான் வருவேன் என்று நரசிங்கரிடம் வீர வசனம் பேசிவிட்டுச் சென்றார்.

தளபதியைப் பார்த்தவுடன் திருமாளிகைத் தேவர் “என் தலையை வெட்டுவதற்காகத் தானே வந்தீர்கள்! சரி வெட்டிக் கொண்டு போங்கள்” என்று அமைதியாகக் கூறினார். உடனே வீரர்கள் இரொவருகொருவர் வெட்டிக் கொண்டு இறந்தார்கள். தப்பிப் பிழைத்த இரண்டொருவர் மன்னரிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.

மன்னர் திருமாளிகைத் தேவரை, தன்னைப் போல் மந்திரம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொண்டு, “அவன் மந்திரம் என்னிடம் பலிக்குமா, நானே சென்று அவனை ஒழித்துவிடுகிறேன்” என்று கிளம்பினார்.

திருவாடுதுறை மாசிலாமணி ஈசன் கோவிலின் மதிர் சுவற்றின் மேல் நான்குப் புறமும் காவல் இருந்த காளைகள் உயர் பெற்று எழுந்து நந்தி தேவரின் உடலில் புகுந்து பூதகணங்களாக வெளிப்பட்டு, மன்னருடன் வந்த படைகளை அழித்தன. மந்திரியையும், மன்னரையும் இருக்கக் கட்டி, திருமாளிகைத் தேவரின் முன்னால் நிறுத்தின. மன்னரின் முன்பேயே அந்த காளைகள் நந்தி உருவத்துள் புகுந்து மறைந்தன.

ஆனால் திருமாளிகைத் தேவரோ, நடந்தவற்றிகும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல், சிவனே என்று அமைதியாக உட்கார்ந்திருந்தார். இந்த நிலை சிற்றசர் நரசிங்கருக்கு பல உண்மைகளை உணர்த்தியது. உடனே மன்னர் “சிதார் பெருமானே, தங்கள் அருமையை அடியேன் அறியவில்லை. சாதாரண மந்திரவாதி என்று நினைத்து பெரும் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று அழுதார்.

அரசரை அமைதிப் படுத்திய திருமாளிகைத் தேவர், “நரசிம்மா இடைவிடாமல் நாம் எதை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அது நம் நெஞ்சில் பதிந்து நிற்கும். இது உலகின் இயல்பு. பெண்கள் என்னை அன்போடு நினைத்தனர். அதன் விளைவாகவே அவர்களின் குழந்தைகள் என்னைப் போல் இருந்தன. யார் மீதும் தவறு இல்லை. அரசனான நீ வாதிகளான அவர்கள் சொல்லை கேட்டாயே தவிர பிரதிவாதியான என்னை ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லையே. அதனால் தான் உனக்கு இவ்வளவு தொல்லைகளும் நடந்தன” என்று கூறி அரசரையும், அமைச்சரையும் விடுவித்தார்.

திருவாடுதுறை மாசிலாமணி ஈசன் கோவிலில் மதில் மேல் ரிஷபங்கள் இல்லாதிருப்பதை இன்றும் நாம் காணலாம்.

ஒருநாள் போகரும், திருமாளிகைத் தேவரும் கோவிலில் சிவ தரிசனம் முடிந்து பயற்றஞ் சுண்டல் பெற்றுக் கொண்டு வெளியேறும் பொழுது தீவட்டி பிடிப்பவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதனால் அவரை எழுப்ப வேண்டாம் என்று திருமாளிகைத் தேவரே குருவிற்கு தீவட்டிப் பிடித்துக் கொண்டு சென்றார். போகருக்கு இது தெரியாது. அருள்துறை என்னும் திருமடத்தை நெருங்கியதும், “தீவட்டிப் போதும். இங்கேயே நில்.” என்று சொல்லி விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் போகர் திருமடத்துக்குள் சென்றார்.

“குரு வார்த்தையே வேதவாக்கு” என்று திருமாளிகைத் தேவர் பொழுது விடியும் வரை ஒரு கையில் பயற்றஞ் சுண்டலும், மறு கையில் தீவட்டியும் வைத்துக் கொண்டிருந்ததால், காலை அனுஷ்டாங்களை செய்ய, தூய்மையான வேறு இரண்டுக் கைகளை உண்டாக்கி முடித்துக் கொண்டார். அச் சமயம், போகர், “திருமாளிகை எங்கே!” என, திருமாளிகைத் தேவர், “சுவாமி அடியேன் இங்கே இருக்கிறேன்” என்று வீதியில் இருந்து குரல் கொடுத்தார். ஏன் உள்ளே வரலாமே என்று குருநாதர் கூறியவுடன் திருமாளிகைத் தேவர் உள்ளே போனார். இரவெல்லாம் விழித்திருந்த சீடரின் குரு பக்தி போகரை வியக்க வைத்தது.

அதன் பிறகே தீவட்டி பிடிப்பவர் வந்தார். குருநாதரின் கட்டளைப்படி, தீவட்டியை அவரிடம் ஒப்படைத்தார் திருமாளிகைத் தேவர். திருமாளிகைத் தேவரின் கையில் இருந்த பயற்றஞ் சுண்டல், வேகாத பயிராக மாறியதால் அதை ஆட்கள் மூலம் நிலத்தில் விதைத்தார். சில நாட்களில் அவை முளைத்துச் செழித்தன. இதைப் பார்த்த ஊர்மக்கள் திருமாளிகைத் தேவரை சித்தர் என்று நம்பினர்.

ஒரு நாள் வழக்கம் போல் திருமாளிகைத் தேவர், காவிரியில் குளித்து அனுஷ்டாங்களை முடித்து, பூக்களைப் பறித்துக் குடலையில் நிரப்பி, அபிஷேகதுக்கான நீருடன் கோவிலை நோக்கி கிளம்பினார். அப்பொழுது வழியில் பிணம் ஒன்றை சுமந்தப் படி நால்வர் வந்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த திருமாளிகைத் தேவர், மனம் குழம்பி, அருகில் இருந்த விநாயகரைத் துதித்து “விக்னேசா, என் மனம் கொண்ட விக்கினத்தைக் களை” என்று வேண்டி பாடையில் இருந்த பிணத்தை நோக்கிப் பார்த்தார். உடனே இறந்தவன் எழுந்தான். இதைப் பார்த்த அனைவரும் திருமாளிகைத் தேவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். திருமாளிகைத் தேவர் சிவ சிவ என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.

அன்றிலிருந்து திருமாளிகைத் தேவர் காவிரியில் நீராடிவிட்டுத் திரும்பும் பொழுது தீர்த்தக் குடத்தையும், பூக் குடலையையும் ஆகாயத்தில் வீசிவிட்டு வேகமாக நடப்பார். அவையும் ஆகாயத்தில் அவரைத் தொடர்ந்து வரும். பூஜை செய்யும் இடம் வந்ததும் திருமாளிகைத் தேவர் தன் இரண்டு கையையும் நீட்டுவார், அவை அவர் கைகளில் வந்து சேரும். பின்பு பூஜைகளை செய்வார்.

ஒரு நாள், போகர், திருமாளிகைத் தேவரிடம்,

தேவா,
எந்த நிலையிலும் நீ மனத் தளர்ச்சி அடையக் கூடாது.
பாலும் சோறும் கலந்து ஊட்டினாலும் இந்த உலகம் உண்ணாது.
வேலியே பயிரை மேயும்.
தோல் இருக்க சுளை விழுங்கிகள் பெருகுவார்கள்.
பொய்மை ஆட்டம் போடும்.
உண்மை தலை கட்டாது.
எங்கும் போலி மயமான கொள்கைகளே பொங்கி வழியும்.
என்றும் இந்த நிலை நீடிக்கும்.

இதற்காக நீ மனம் இடிந்து விடக் கூடாது. சந்தனக் கட்டைப் போல இந்த உடல் கைங் கரியத்தில் ஈடுப் பட வேண்டும். மனம் தளராதே. நான் புகலூருகுக் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அதன் பின், திருமாளிகைத் தேவர், மாசிலாமணி ஈசரை வழிப்படுவதும், குரு தேவரின் பாதுகைகளை பூஜை செய்வதும், வலியப் போய் அடுத்தவருக்கு உபதேசம் செய்வதும், நல்வழிக் காட்டுவதுமாக இருந்தார். திடீரென்று ஒருநாள் திருமாளிகைத் தேவர், திருவீழிமிழலைக்குப் சென்று சிவ ஆலயத் தத்துவங்களை விளக்கும் வகையில் ஒரு தேரை உருவாக்கி அதன் மேல் சுவாமியை வைத்தார். மக்கள் எல்லோரும் கூடி தேரை இழுக்க, தேர் நகரவில்லை. மக்கள் கவலையில் ஆழ்ந்தார்கள். திருமாளிகைத் தேவர், தேரின் வடங்களை அவிழ்த்துவிட்டு, தனக்கும், தேருக்குமாக ஒரு சதாரனமான கயிற்றை கட்டி மாட வீதிகளை வலம் வந்தார்.

திருமாளிகைத் தேவர் சொன்ன உபதேசங்களில் ஒன்று.

நமது மூக்கில் உள்ள இரண்டு துவாரங்களில், வலது துளை சிவம், இடது துளை சக்தி.
சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் சிவத் துளையின் வழியாகவும், திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் சக்தித் துளையின் வழியாகவும் சுவாசம் வெளிப்பட வேண்டும்.

வியாழக் கிழமைகளில் மட்டும், வளர்பிறையாக இருந்தால் சக்தித்துளை வழியாகவும், தேய்பிறையாக இருந்தால் சிவத்துளையின் வழியாகவும் சுவசாம் வெளிப்பட வேண்டும்.

நாம் விடும் சுவாசத்திற்கு (மூசுக் காற்றிற்கு) சரம் எனவும், பிராணன் எனவும் பெயர்கள் உண்டு. சரம் மாறி வருகிறது என்றால், மறுப் பக்கமாக ஒருக்களித்து படுத்து, உரிய நாளில் உண்டான சரத்தை முறையாக இயக்கலாம். இதைத் தான் சித்தர்களின் பாலப் பாடம், “சரத்தைப் பார்த்து பரத்தைப் பார்” என்று சொல்கிறது. பரம் என்றால் பரம் பொருள்.

திருமாளிகைத் தேவர் திருவாடுத் துறையில் சித்தியடைந்தார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!