கொங்கண நாயனார்

பெயர் : கொங்கனவர்
பிறந்த மாதம் : சித்திரை
பிறந்த நட்சத்திரம் : உத்திராடம்
உத்தேச காலம் : கி.பி. 14ம் நூற்றாண்டு
குரு : போகர்
சமாதி : திருப்பதி
வாழ்நாள் : 800 வருடம் 16 நாட்கள்

கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கண நாயனார் சித்தர் திருமழிசை ஆழ்வார் காலத்தவர். கி.பி. ஏழாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். இவருடைய தாய், தந்தையார் இரும்பை உருக்கிக் கலங்கள் செய்து கோயில் வாசலில் வைத்து, அவற்றை விற்று வரும் பணத்தில் பிழைத்து வந்தனர். ஏழமை நிலையில்இருந்தாலும் தங்கள் இல்லம் வரும் முனிவர்கள்,சாதுக்கள்,சித்தர்களையும் முகம் மலரஅகம் குளிர வரவேற்று உபசரித்து வந்தனர்.அதே வழியில்கொங்கணாரும் சாதுக்களையும்,சந்நியாசிகளையும் ஆதரித்து தொண்டு ஊழியம் செய்து வந்தார்.

கொங்கணர் பிற்காலத்தில் மிகவும் செல்வந்தராக இருந்தார் என்பதை,

“ தோணவே கைத் தொழிலாங் கலங்கள் செய்து தோராமல் வர்த்தகத்தில் நிபுணனாகி ஆணவங்கள் உள்ளடக்கி அரிய பாலன் அவனிதனில் வர்த்தகனாயிருந்தார் தாமே…’

என்று அகத்தியர் கூறும் பாடலின் மூலம் அறியலாம்.

வீரட்டகாச மூர்த்தியின் சிரசில் தமது குளிகையை வைக்க அச்சிவலிங்கமூர்த்தம் அக்குவிகையை நீராக்காமல் மறைத்ததால் அச்சிவ மூர்த்தியைப்பூசித்து இவர் குளிகைபெற்றார். இவர் ஒரு சமயம் திருமழிசை ஆழ்வாரிடம் குளிகை ஒன்றைக் கொடுத்து’ “ இது காணி கோடியைப் போதிப்பது!” என்று கூற திருமாழிசை ஆழ்வார் தம் தேகத்தின் அழுக்கையே உருட்டிக் கொடுத்து, ”இது காணி கோடியாக்கும்!” என்று கூறினார். அதை இவர்பரீட்சித்து அறிந்து ஆழ்வாரிடம் நட்புக் கொண்டார். இவரது நாடு கொங்கு நாடாயிருக்கலாம். இவர் வடக்கிலிருந்து தெற்கில் வந்து தஞ்சாவூரில்தன் பெயரால் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்து முக்தி பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரைச்சிலர் அகஸ்தியர் மாணவர் என்று சொல்வர்.

இவர் மருத்துவ நூல்களும், இரசவாத நூல்களும், யோக நூல்களும், கொங்கணர் கடை காண்டம்,திரி காண்டம், ஞானம் நூறு, குவிகை, கொங்கண தேவர் ஐந்நூற்றிரண்டு,கொங்கண தேவர் கலை, கொங்கண நாதர் சூத்திரம், கலைஞர் சூத்திரம், துருசுகுடுமுப்பத்தொன்று, தலைக்காண்டம், நடுகாண்டம், முப்பூதிட்சை, கொங்கணர் வாக்கியம்,கொங்கணர் தியானம் முதலிய நுட்களை இயற்றியுள்ளார். கொங்கணர் சித்தருக்குள் தனக்குதானே ஏதோ சிந்தனை ஓட்டம் பரவியது.நிஷ்டை ஆழ்ந்தார்.ஆழந்த நிஷ்டை மூலாதாரத்தில் சித்தி சித்தி செய்தபோது ஆறாதாரமும் பணிந்து ஒளிரும்.அண்டம் கைக்குள்ளடங்கி சித்தித்தது. காயசித்தி, வாதசித்தி, யோக சித்தி, ஞானசித்தி அனைத்தும்பெற்றார். தன்னை அறிந்து அர்ச்சிக்க உடல் தத்துவம் அறிய வரும். உலகம் அணுவின் சேர்க்கை.உடல் இறந்த பின்பு பஞ்ச பூதங்களும் அதன் அதன் கூட்டில் கலந்துவிடும். உடல் அழியாமல் காக்கும்நெறி அறிந்தவர்கள் சித்தர்கள்.

ஞானப்பால் அருந்திய கொங்கணர் சித்தரிடம் அஞ்ஞானம் அகல, ஒருநாள் அவர் சந்நியாசியாகிகாடு, மலை, வனங்களென சுற்றி திரிந்தார். இப்படி காடுகளில் சுற்றி திரிந்த போது அரிய கற்பகமூலிகை கண்டறிந்தார். ஒருநாள் வனாந்தரங்களில் மூலிகைகளை தேடிகொங்கணர் அலைந்தபோது, ஒரு துயர் சம்பவத்தை பார்த்தார். அக்காட்டில் பளிங்கர் இனத்தைச் சேர்ந்த ஓர் அழகிய இளைஞன் இறந்து கிடந்தான். அவனதுஉற்றார் உறவினர் அனைவரும் துக்கத்தால் நெஞ்சம் குமற கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த துயரமான சம்பவம் கண்டகொங்கணருக்கு துக்கம் சூழ்ந்தது. உடல் அழிந்து போகுமென்றுசாமான்யர் அழலாம். அழியாது காக்கும் நெறியறிந்த சித்தர் கவலை கொள்ளலாமா? தான்கற்ற கூடுவிட்டுக் கூடுபாயும் பரகாயப் பிரவேசம் மூலம், தனது உடலை மறைவாக ஓர்இடத்தில் உதிர்த்துவிட்டு இறந்து போன பளிங்கர் இளைஞர் சடலத்துள் புகுந்து உயிர் பெறசெய்தார். உற்றார், உறவினர், நண்பர்கள் என சுற்றிலும் எல்லாரும் கதறிக்கொண்டிருக்க பளிங்கர் இளைஞன் அப்போதுதான் உறங்கி எழுப்பவன் போல் உயிர் பெற்று எழுந்ததைப் பார்த்து அவர்கள் அனைவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அங்கு மறைவாக மறைத்து வைத்திருந்த கொங்கணர் உடலை பளிங்கர் கூட்டம் கண்டவர். உயிரணைந்த உடல் உடன் எரிதீயில் நனைய வேண்டும். மரப்பட்டைகளை கொண்டு எரித்து சாம்பலாக்கினர் சகல சித்திகளும் பெற்ற சித்தர்களுக்கு, யோகிகளுக்கும்,ஞானிகளுக்கு எந்த உடலும் தேவையுமில்லை, சொந்தமுமல்ல. உயிர் நடமாட ஒரு கூடு மட்டும் தேவை. அதுவும் வாய்க்கவில்லை எனின் தனித்து சூக்கும உடலாய் அலையவும் அறிந்தவர்கள்.இப்போது பளிங்கர் உடலில் புகுந்த கொங்கணர் அரிய மூலிகைகளின் இரகசியத்தை அனைத்தையும் கண்டறிந்தார். அனைத்து காய சித்திகளையும் மூலிகையும் தெரிந்துக்கொண்டார். மகா சித்தர் போகரையும் அகத்தியரையும் சந்தித்து அவர்களிடமிருந்து ஞானம் பெற்றார். பிண்டத்தினை அறிந்தால் அண்டத்தை உணரலாம்.அந்த ஆதிப்புள்ளியையும் போகரிடம் இருந்து அறிந்து வைத்திருந்தார்.அந்த ஆதி,அந்தம் புள்ளியை நோக்கி, அக்கானத்தில் மூச்சடக்கி நிஷ்டையில் ஆழ்ந்தார். கவிந்த வாழைப் பூவைப்போல முகத்தை கீழ் நோக்கி வைத்துக்கொண்டு, பெண்பாம்பு (வாலை) போல் சுருட்டி சீறியபடி கிடக்கும் குண்டலினி சோதி தட்டி எழுப்பினார். மூலத்தில் சோதியை கண்டவரே கொங்கணர். தடையற்ற அந்த ஆனந்த மகிழ்ச்சியில் நிஷ்டையில் இருந்த போது ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று ‘சட்டென’ கண்ணிமையில் எச்சமிட.., சித்தரின் இமைப்பகுதி திறக்க கோபக்கனல் பட்டு அந்த கொக்கு எரிந்து சாம்லாகி தரையில் விழுந்தது. நிஷ்டை கலைந்து போயிற்று.

நீண்ட காலம் ஆகாரமற்று இருந்த காரணத்தால் வயிறு பசித்தது. ஆகாரம் வேண்டி ஒரு இல்லத்தில் முன் நின்று உண்ன உணவு வேண்டினார். அந்த இல்லத்தரசி கொங்கணர் வந்து நின்றதையே கண்டு கொள்ளாது, வெளியிலிருந்து வந்த தன் கணவனுக்கு ஆசனமிட்டு, தலைவாழை இலை விரித்து சாப்பாடும், பதார்தங்களையும் இட்டு பரிமாறினாள். கணவனுக்கு உணவு பரிமாறுவதிலும், தாகம் தீர்க்க தண்ணீரும், தாம்பூலம் தரித்து கொடுப்பதிலும் கவனம் பிசகாது நடந்துகொள்வதை கண்ட கொங்கணரும் உடல் கோபத்தில் நடுங்கியது. இல்லத்தில் பத்துபாத்திரம் தேய்க்கும் அற்ப மானுடப் பெண், சகல சித்திகளும் கைவரப் பெற்ற தன்னை வாசலில் காத்து நிற்க வைத்து காயப்படுத்தி விட்டாளே என்று அவளை சினம் பொங்க விழித்துப் பார்த்தார். “ ஓ…, என்னை கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா “ என்று அவரது சினப்பார்வையை சட்டை செய்யாது அந்தப் பதிவிரதை கேட்டதும் அப்படியே அதிர்ந்து போனார் கொங்கணர். இந்த சாமான்ய பெண்மணிக்கு இந்த உடன் அறியும் சித்து எப்படி சாத்தியமாயிற்று? மனமானது நம்மிடத்திலேயே உள்ளது என்ற போதிலும், நமக்கே தெரியாத ஆழ்கடல் இரகசியங்கள் அதனுள் புதைந்து கிடக்கின்றன. இம்மண்ணுலகில் சாதாரண மானுடர் இடத்திலும் அதீத சித்து இருப்பதை கொங்கணர் அறியக்கூடிய வாய்ப்பு இது. பதிவிரதை தர்மத்தின் முன்னால் தனது சித்து ஏதும் செல்லா என்பதை உணர்ந்தார். இச்சம்பவத்தினால் மிகவும் மனம் நொந்த போனார் கொங்கணர். இதனிலும் மேல் தனது வலிமையை பெருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான இடமும்,வழிமுறைகளை தேடி அலைந்தார்.

கானகத்தில் இடம் தேடி அலைந்தபோது அவர் காதுகளில் சங்கு, செகண்டிகள் முழங்க, மத்தளம், பேரிகையும் ஒலியும் கேட்டது. அப்போது கொங்கணர் கண்ணெதிரே ஒரு சமாதி தெரிந்தது. கைகூப்பி வணங்கி நின்ற போது போது சமாதியிலிருந்து சோதி சொரூபியாக கெளதம மகரிஷி வெளியே வந்தார். கொங்கணர் கெளதம மகரிஷி வணங்கியபடி தன் வாழ்க்கை வரலாற்றினை அனைத்தும் அவருடன் பகிர்ந்து கொண்டார். ”சுவாமி நான் இன்னும் மேலான பரிபூரண சித்து அடைய விழைகிறேன். அதற்கு தாங்கள் அருள் புரிய வேண்டும்” என்று கொங்கணர் வேண்டினார். “ நான் அது ஆனேன் என்பது வேதாந்தம். அது நான் ஆனேன் என்பது சித்தாந்தம். முன்னதில் நான் எனும் முனைப்பு தோன்றி ஆன்மா முற்பட்டு நிற்க , பிரம்மம் பிற்பட்டு நிற்கிறது. ஆனால், பின்னதில் பிரம்மம் முன்னிற்க, நான் எனும் ஆன்மா பின்னிற்கிறது .இவைகளை தாண்டி நீ இன்னும் உயர் சித்தி அடைய சமாதி நிலை தேவை. அதற்கேற்ற இடமும் இதுதான் ” என்று ஓரிடத்தினை கெளதம மகரிஷி காட்டினார்.

கொங்கணர் அந்த இடத்தில் இறங்க மழை பொழிகிறது. அவர் சாமதி இருந்த இடத்தில் பூமி மூடிக்கொண்டது. துக்கமிலா ஒளிமயமான மனநிலை மனநிலை மனத்தை உறுதிப் படுத்துகிறது. மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு நிலையில் நிலைக்காதிருக்க அதுவே சமாதி. பரத்தோடு சேர்ந்து பரம் பொருளாக ஆகும் நிலை அது. ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் சமாதி நிலையில் இருந்தார் கொங்கணர். பற்றற்ற சித்தருக்கும் சித்துக்கள் மீதான ஆசைப் பற்று அற்று போய்விடுவதில்லை.சமாதி நிலையிலிருந்து திரும்பிய கொங்கணர் இன்னும் உயர்நிலை பெறும் வேட்கையில் யாகம் செய்ய முற்பட்டார். இதனை அறிந்த கெளதம மகரிஷி கோபமுற்று கொங்கணர் சித்தரிடம் வந்தார்.

“சித்தர்கள் வாழ்க்கை முறை வேறு; முனிவர்கள் வாழ்க்கை முறை வேறு. முனிவர்கள் செய்யும் யாகங்களை சித்தர்கள் செய்தல் தவறு. சித்தர் ஒரு நாளும் முனிவராவதில்லை. சாபங்களும் வரங்களும் அருளும் சக்தி எங்களுக்கு மட்டுமே உரியது. நீ செய்தது அதிக பிரசங்கித்தனமான செயல். செயலுக்குரிய செயலால் இதோ பிடி சாபம்..” – என்று கெளதம மகரிஷி சபித்தபோது கொங்கணர் மிரண்டு போனார் “சுவாமி, சாபம் ஒன்று உண்டெனில் விமோசனம் என்ற ஒன்று உண்டல்லவா? தயை கூர்ந்து சாப விமோசனம் தாருங்கள் “என வேண்டினார்.

“நீ தில்லை வனத்துக்குச் சென்று தாயாரைத் துதித்து சாப விமோசனம் பெறுவாய்..”

தில்லை வனத்துக்குச் சென்ற கொங்கணர் தாயாரை துதித்த போது அங்கு வந்தபராசர முனிவரை வணங்கி சாப விமோசனம் பெற்றார். அன்றிலிருந்து கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தரானார்.

திருமாளிகைத் தேவரைக் கண்டு வணங்கி பல இரகசிய சாதனை முறைகளை அறிந்து கொண்டு தீட்சை பெற்று, நிர்வாண தீட்சையும் பெற்றார். செரூப மணியை வாயில் வைத்துக்கொண்டும் கமலினியை இடுப்பில் கட்டிக்கொண்டும் அட்டமா சித்திகள் யாவும் செய்தபடி ஆகாய மார்க்கமாக உலகமெங்கும் உலா வந்தார் கொங்கணர். கொங்கணருக்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட சீடர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் யோக ஞான சித்திகளைப் பெற வழிகாட்டினார். இறுதியாக் திருவேங்கடமலைக்குச் சென்று தவம் செய்து அங்கேயே சமாதி நிலையடைந்தார்.

கொங்கணவர் இயற்றிய நூல்கள்:

 • கொங்கணவர் வாதகாவியம் – 3000
 • கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
 • கொங்கணவர் தனிக்குணம் – 200
 • கொங்கணவர் வைத்தியம் – 200
 • கொங்கணவர் வாதசூத்திரம் – 200
 • கொங்கணவர் தண்டகம் – 120
 • கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
 • கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
 • கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
 • கொங்கணவர் வாலைக்கும்பி – 100
 • கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் – 80
 • கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
 • கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
 • கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
 • கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21
 • கொங்கணவர் சுத்த ஞானம் – 16
Please follow and like us:
Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!