கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம்:
தேவராய சுவாமிகள் முருகப் பெருமான் மீது கொண்ட பக்த்தியின் பால், 16ம் நூற்றாண்டில், ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை தனித்தனியே பாடினார்.

  1. முதலாவது கவசம் – பழநி கவசம்
  2. இரண்டாவது கவசம் – ஸ்வாமி மலை கவசம்
  3. மூன்றாவது கவசம் – திருச்செந்தூர் கவசம்
  4. நான்காவது கவசம் – திருப்பரங்குன்றம் கவசம்
  5. ஐந்தாவது கவசம்- திருத்தணி(கை) கவசம்
  6. பழமுதிர்சோலை – பழமுதிர்சோலை கவசம்

ஒவ்வொரு படை வீட்டிற்கும் தனித்தனி சஷ்டிக் கவசம் இருந்தாலும், இவை அனைத்துமே ‘கந்த சஷ்டி கவசம்’ என்ற ஒரே பெயரை கொண்டு அழைக்கப்படுகிறது.

சிலர் கந்த சஷ்டி கவசம் , அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம் என்றும், சிலர் பழனி முருகன் மீது பாடப்பட்டது என்றும் கூறுவார்.

பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை எழுதுவது அக்கால மரபு. அதன் படிப் பார்த்தால் இந்தக் கவசம், ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அரங்கேற்றியதாக அரியப்படுகிறது. ஏனெனில் கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.

ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் ‘பழநிமலையின் மீது’ கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்று பாடியுள்ளார். எனவே இக்கவசம் பழநியில் பாடப்பெற்றது என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றையும், இவ்வரிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம். மேலும் ‘எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் (156, 157) மைந்தன் என்மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்! (198, 199) எனைத்தடுத்து ஆட்கொள் எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் ‘வேலவா போற்றி’ (227,228) என்ற வரிகள் மூலம் பழநிப் பரமன் ஆட்கொண்டு இக்கவசம் பாட வைத்ததை உறுதியாகக் கூறலாம்.

இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இருப்பினும் கந்த சஷ்டி கவசத்தை, ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும். இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும்.

தேவராய சுவாமி கந்த சஷ்டி கவசம் பாடிய பின்னணி:
தேவராய சுவாமி, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலில் மலையை சுற்றி கிரிவலம் வந்தபொழுது, அங்குள்ள மண்டபங்களில் உடல் நோயாலும், மன நோயாலும், வறுமையாலும் பீடிக்கப்பட்டு பலர் வருந்துவதைக் கண்டார். இதனால் அவர் மனம் வருந்தி, இது போன்றவர்களுக்கு ஒரு நல் வழியைக் காட்டி அவர்களின் தேவையை தீர்க்க முருகன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார். அன்று இரவு, பழனி ஆண்டவர் கோவில் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, முருகப் பெருமான் தேவராய சுவாமிகளின் கனவில் தோன்றி, “உன் எண்ணம் நிறைவேற அருளினோம். உடல் பிணி உட்பட அனைத்தும் நீங்கும் வழியை உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு. அதனை உச்சரிப்பவர் உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் உண்டாகி படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் ” என்று கூறி மறைந்தார். இதை கேட்ட தேவராய சுவாமி பரவசத்துடன் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசத்தைப் பாடினார்.

தேவராய சுவாமி பின்னணி:
தேவராய சுவாமி, தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்த கணக்கர் வீரசாமிப்பிள்ளைக்கு மகனாவார். வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் இருந்து முருகன் திருவருளால் தேவராய சுவாமி பிறந்தார்.

கந்த சஷ்டி கவச நன்மைகள்:
சஷ்டிக் கவசத்தை கந்த சஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் நம்பிக்கை. இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்)

கந்த சஷ்டி கவசத்தை ஒரு நாளைக்கு முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறு அணிந்தால்
எல்லா நோயும் நீங்கும்;
நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்யும் என்றும்,
இன்பமுடன் வாழ்வர் என்றும்;

தேவராய சுவாமி உறுதியாக கூறுகிறார்.

கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமான “சரவணபவ” என்னும் திருநாமம், கந்த சஷ்டி கவசத்தில் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் பொருத்தி தேவராய சுவாமி பாடியுள்ளது இந்த கவசத்தின் சிறப்பு. அதலால் தானோ என்னவோ, கந்த சஷ்டி கவசம் ஒரு மந்திர மறை நூல் என்று இதனை பாராயணம் செய்து பலன் அடைந்தவர்கள் தங்களது அனுபவ உண்மையால் பூரிப்படைந்துக் கூறுகின்றனர். கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது என்பதை தின்னமாக நம்புகிறார்கள்.

கந்த சஷ்டி கவசம் சொல்லும் பொழுது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் நாம் சொல்லும் பொழுது நம் எண்ணம் ஒவ்வொரு அங்கம் மீதும் ஒரு நிமிடம் நிலைக் கொள்வதால் நம் மூளை அந்த அங்கங்களின் மீது தனிக் கவனம் செலுத்துகிறது. இப்படி நடப்பதால் அந்தந்த அங்கங்களில் உள்ள சிறு சிறுக் குறைகள் தானாகவே சரி செய்துக் கொள்ளும். இதை தான் இப்போதைய அறிவியல் மனோ தத்துவ முறையில் குணமாக்கும் முயற்சி என்று கூறுகிறது.

கந்த சஷ்டி கவசத்தில் வரும் “நவ கோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்” என்ற வரிகள், நவ கோள்களால் இந்த பூமிப் பந்தே மாற்றங்களைச் சந்திக்கும் போது, இந்த உடலும் கட்டாயம் சந்திக்கும் என்றும், அவ்வாறு நவக் கோள்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இந்த கவசம் பாதுகாக்கும் என்பதையும் உணர்த்துகிறது.

ஆதலால் சஷ்டி நாளன்று இந்த பாடலை படிக்க இயலாவிட்டாலும், கேட்டாவது நன்மை அடைவோம்.

அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிந்த பாம்பன் சுவாமிகள், தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று பாம்பன் சுவாமிகள் விரும்பி பாடியது  “சண்முக கவசம்”.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!